ஆட்சி மாறினால் மாநில கவர்னர்கள் மாற்றப்படுவது அவசியமா?

மத்தியில் ஆட்சி மாற்றம் நடைபெறும் போது மாநில கவர்னர்கள் மாற்றப்படுவது வழக்கம். மாநில அரசுகளை கட்டுப்படுத்துவது அந்த மாநில கவர்னரைக் கொண்டே முடியும் என்பதால், ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ஆட்சி அமைக்கும் கட்சி தங்கள் கட்சி சார்ந்தவர்களையோ அல்லது தங்களுக்கு வேண்டியவர்களையோ நியமிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. ஆனால் இந்த நடைமுறை கூடாது என 2010ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் உத்தரவிட்டது. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரசில் சோலி.ஜெ.சொராப்ஜி கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.

கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது : நமது அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் கவர்னரே ஒரு மாநிலத்தின் தலைவர். சட்டப்பிரிவு 156(1)ன் படி, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநில கவர்னர்களை ஜனாதிபதி நியமிக்கிறார். அவ்வாறு நியமிக்கப்படும் கவர்னர்கள் 156(3) சட்டப்பிரிவின்படி 5 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். 1979ம் ஆண்டு ஹர்கோவிந்த் பன்ட் மற்றும் டாக்டர்.ரகுகுல் திலக் ஆகியோர் இடையேயான வழக்கில், மத்திய அரசின் பரிந்துரையின் பேரிலேயே மாநில கவர்னர்கள் நியமிக்கப்படுகிறார் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. 

அதே சமயம் கவர்னருக்கான சட்டப்பூர்வ அதிகாரங்களை கணக்கிடுகையில், கவர்னர் என்பவர் மத்திய அர சு ஊழியரோ அல்லது மத்திய அரசிற்காக வேலை செய்பவரோ அல்ல. அவர் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுபவர் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
நான்காம் தர ஊழியரா?

சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு 2004ம் ஆண்டு பி.பி.சிங்கல் என்பவரால் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2004ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி உத்திர பிரதேசம், குஜராத், அரியானா மற்றம் கோவா மாநில கவர்னர்கள் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் திடீரென மாற்றப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்த இந்த மனுவில் முன் அறிவிப்பின்றியோ, காரணங்கள் ஏதும் இல்லாமல் இருக்கும் போதோ மத்திய அரசால் மாநில கவர்னரை மாற்ற முடியுமா? அவ்வாறு நீக்க நான்காம் தர அரசு ஊழியரா கவர்னர்? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது. 


இந்த முரண்பாடான நிலைப்பாடு குறித்த மனுவை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், எஸ்.ஹச்.கபாடியா, ரவீந்திரன், சுதர்சன் ரெட்டி, சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, 2010ம் ஆண்டு மே 7ம் தேதி தீர்ப்பு வழங்கியது. 156(1) சட்டப்பிரிவின்படி கவர்னர் அதிகாரம் பெற்றிருந்தாலும், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவது மழுமையான சட்டதிட்டங்களின் படி நடைபெறுவதில்லை என்ற வாதத்தை சிங்கல் முன்வைத்தார். ஒரு கவர்னர் நீக்கப்படுவதற்கு தகுதியான காரணங்களோ, விசாரணையோ, முன் அறிவிப்போ இல்லாமல் உள்ளது எனவும் அவர் கூறினார். ஒரு கவர்னரை நீக்கும் அதிகாரம் தனக்கு உள்ளதாகவும், அதற்கு யாருக்கும் காரணமோ விளக்கமோ சொல்ல வேண்டியதில்லை என மத்திய அரசு கருதுகிறது. ஜனாதிபதி, ஒரு கவர்னர் மீத நம்பிக்கை இழக்கும் பட்சத்தில், ஜனநாயக மற்றும் தேர்தல் நடைமுறைகளின்படி அந்த கவர்னரை மாற்றலாம்.

நீக்கம் செய்ய தகுந்த காரணம் தேவை:

சிங்கலின் விரிவான வாதத்தை கேட்ட பிறகு, நீதிபதிகள் பெஞ்சின் சட்ட நடைமுறைகளின்படி ஆய்வு செய்த முடிவு குறித்து நீதிபதி ரவீந்திரன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஒரு மாநிலத்தின் மழு அதிகாரத்தையும் கொண்டுள்ள கவர்னரை நீக்குவது சட்டரீதியான விஷயம். சரியான காரணம் இருந்தால் மட்டுமே ஒரு கவர்னரை அவரது பதவி காலம் முடியும் முன்னர் பதவி நீக்கம் செய்ய முடியும்.

 தன்னிச்சையாகவோ, காரணம் இல்லாமலோ கவர்னரை நீக்க முடியாது. கவர்னர் என்பவர் மத்திய அரசின் கொள்ளைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் அப்பாற்பட்டவர் என்பதால், அவர் மீது மத்திய அரசு கொண்டுள்ள நம்பிக்கையை இழப்பதால் அரசு அல்லது ஆளுங்கட்சியின் அதிகாரத்தை கொண்டு கவர்னரை மாற்ற முடியாது. கவர்னர், மத்திய அரசு ஊழியர் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் போது, ஏற்கனவே இருக்கும் மாநில கவர்னர்களின் ஆட்சி காலம் முடியும் முன்னரே அவர்களை நீக்கி விட்டு தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளபவரை புதிய அரசு நியமிக்க முடியாது. இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.


மத்திய அரசின் ஏஜென்ட் அல்ல:

கவர்னர்களை நீக்குவது தொடர்பான விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பெஞ்ச், ஒரு கவர்னரை அவரத பதவி காலம் முடிவதற்கு முன் பதவி நீக்கம் செய்வதற்காக அவருக்கு நோட்டீஸ் அனுப்புவது மற்றும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற மனுவையும் தள்ளுபடி செய்தது. ஊழல், நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். ஒரு கவர்னர் மீதான நடவடிக்கைகள், மற்றவர்கள் அவரை பகுதி நேர அரசியல்வாதியாகவோ அல்லது மத்திய அரசின் ஏஜன்ட் என நினைப்பதற்கும் வழிவகுத்தி விடக் கூடாது என்பதற்காக இத்தகைய தெளிவான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி உள்ளனர்.


கவர்னரை நீக்கவேண்டும் என தேவை எழும்பட்சத்தில் அது குறித்து ஜனாதிபதி அறிவிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அவ்வாறு நீக்கப்படுவதும் தன்னிச்சையாகவோ, உரிய ஆதாரங்கள் இல்லாமலோ இருக்க கூடாது. நீதித்துறையின் வரையறைக்கு உட்பட்டு, ஜனாதிபதி எடுக்கும் முடிவை மத்திய அரசு கோர்ட்டிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தி உள்ளது. கவர்னரை நீக்குவதற்கான காரணத்தை மத்திய அரசு கோர்ட்டிடம் தெரிவிக்காமல் தன்னிச்சையாக நீக்கம் செய்யுமானால், அப்போது கோர்ட் அந்த விவகாரத்தில் தலையிட்டு முடிவு செய்ய வேண்டும். பல விவகாரங்களில் வாய்ப்பு இருந்தும் கோர்ட் அதில் தலையிட்டு தீர்வு காண்பதில்லை.

அரசால் நீக்கம் செய்யப்படாமல் கவர்னர் தானாக முன் வந்து தனது பதவியை ராஜினாமா செய்தால், புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை கோர்ட் அந்த அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.