வடிவேலுவை வைத்து எப்போதுமே படம் பண்ண மாட்டேன்: இயக்குநர் சுந்தர்.சி

இனிமேல் வடிவேலுவை வைத்து எப்போதுமே படம் பண்ண போவது இல்லை என்று இயக்குநர் சுந்தர்.சி கூறினார்.வினய், சந்தானம், சரவணன், கோவை சரளா, ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'அரண்மனை'. பரத்வாஜ் இசையமைக்க, செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சுந்தர்.சி இயக்கி இருக்கிறார்.
                                                
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது சுந்தர்.சி பேசியது, " நான் இயக்கியிருக்கும் முதல் பேய் படம் இது. வெறும் பேய் படம் அல்லாது, என்னுடைய பாணியில் காமெடி கலந்து கூறியிருக்கும் படம் 'அரண்மனை'.

இப்படத்தில் ஏன் வடிவேலு நடிக்கவில்லை என்ற கேள்விக்கு, "இந்த படத்தில் அதற்கான வாய்ப்பில்லை. வடிவேலு கூட இணைகிற மாதிரி ஐடியாவே இல்லை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே இல்லை." என்று கூறினார்.

இந்த படத்தில் சந்தானம் ஏன்? என்ற கேள்வி, "எப்போதுமே நான் கதையை தயார் செய்தவுடன், அதற்கு எந்த நடிகர் தேவையோ அவர்களை தான் நடிக்க வைப்பேன். ஒரு நடிகருக்கு மார்க்கெட் இல்லையே அப்படிங்கிற எந்த கண்ணோட்டத்திற்கு உள்ளேயும் நான் போனதில்லை.

என்னோட அடுத்த படத்துக்கு கூட சந்தானத்திடம் பேசி இருக்கிறேன். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஒரு சில இயக்குநர்களுக்கு விதிவிலக்கு வைச்சிருக்கார். நான் பேசினப்போ கூட, "நீங்க எப்ப அப்படினு மட்டும் சொல்லுங்க சார். பண்ணலாம்"னு தான் சொன்னார்.

நான் எவ்வளவோ நடிகர்கள் கூட வேலை செஞ்சுருக்கேன். மற்ற நடிகர்கள் மாதிரி, சந்தானம் இதுவரைக்கும் என்கிட்ட இவ்வளவு நாள், இவ்வளவு ரேட் அப்படினு பேசவே இல்லை. என்கிட்ட சம்பளத்தைப் பற்றி பேசவே மாட்டார். அந்த மாதிரி நடிகர்கள் சில பேர் தான் இருக்காங்க" என்று கூறினார்.