பிரதமர் பதவியில் மன்மோகன் சிங்குக்கு இன்று கடைசி நாள்

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ள மன்மோகன் சிங்குக்கு இன்று மறக்க முடியாத நாளாகும்.ஏனெனில் பிரதமர் அலுவலகத்தில் அவர் அமர்ந்து பணியாற்றுவது இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
                                                பிரதமர் பதவியில் மன்மோகன் சிங்குக்கு இன்று கடைசி நாள்

இன்று காலை சவுத்பிளாக் அலுவலகத்துக்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் வழக்கமான பணிகளில் ஈடுபட்டார். மதியம் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்றார். இதுதான் காங்கிரஸ் அரசின் கடைசி மந்திரி சபை கூட்டமாகும்.

இந்த கூட்டத்தில் பார்மசி துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து மந்திரிகள், அமைச்சக அதிகாரிகள் அனைவருக்கும் மன்மோகன்சிங் நன்றி கூறி விடை பெற்றார்.

இன்று நிறைய அமைச்சக உயர் அதிகாரிகள் மன்மோகன் சிங்கை சந்தித்து நன்றி தெரிவித்து பிரியா விடை கொடுத்தனர். இது மன்மோகனிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து மிக முக்கிய பைல்களில் கையெழுத்திட்டு அவர் தன் கடமைகளை நிறைவு செய்தார். ராணுவ தளபதி நியமன உத்தரவில் கையெழுத்திட்டதுதான் அவர் பார்த்து கையெழுத்திட்ட கடைசி கோப்பு என்று கூறப்படுகிறது.

பிரதமர் அலுவலக பணிகள் இன்று முடிந்தாலும் அவர் 4 நாட்களுக்கு பிரதமர் பதவியில் நீடிப்பார். 17–ந்தேதி அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.