மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள பா.ஜ.,வுக்கு புதிய தலைவர்

பா.ஜ., தேசிய தலைவராக இருக்கும் ராஜ்நாத் சிங், மோடி அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதால், அவர் வகிக்கும் பதவி, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர், ஜே.பி.நட்டாவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபா தேர்தலில், தனித்து, 282 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பா.ஜ., இம்மாதம் 26ல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக, தலைநகர் டில்லியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
                                      

'சார்க்' தலைவர்கள்:

மோடியின் பதவியேற்பு விழாவில், 'சார்க்' நாடுகளின் தலைவர்களான, இலங்கையின் ராஜபக்ஷே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் அதிபர் கர்சாய் போன்றோர் பங்கேற்க உள்ளதால், டில்லி நகரம், பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக, குடியரசு தின கொண்டாட்டங்களின் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் போல், மோடியின் பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக, டில்லி அதிகாரி ஒருவர் நேற்று கூறினார். நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு, 2,500 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள்:

* முன்னாள் ஜனாதிபதிகள், அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல்


* முன்னாள் பிரதமர்கள் மன்மோகன், தேவகவுடா


* மோடியின் தாய் ஹிராபா, 95, மோடியின் சகோதரர்கள்


* லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள்


* பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர்கள்

உள்துறை அமைச்சர்:

ஒரு மணி நேரம், 10 நிமிடம் நடைபெற உள்ள பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில், மோடியுடன் முக்கிய அமைச்சர்கள் சிலரும் பதவி யேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ., தேசிய தலைவராக இருக்கும் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் மத்திய அமைச்சராகும் போது, காலியாகும் தேசிய தலைவர் பதவிக்கு, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, ஜே.பி.நட்டா, 53, நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும், பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, மோடி அரசின் நிதியமைச்சராகவும், முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, மின்துறை அமைச்சராகவும், ராணுவ முன்னாள் தளபதி, வி.கே.சிங், ராணுவ அமைச்சராகவும் நியமிக்கப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விரும்பும் இலாகா:

பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் ஆகியோர், முதல் நான்கு மூத்த அமைச்சர்கள் இருவராக இருப்பர் எனவும், அவர்கள் விருப்பப்படி அமைச்சர் பதவியை, மோடி ஒதுக்க உள்ளார் என்பதும், இப்போதைய டில்லி வட்டார தகவலாக உள்ளது. பா.ஜ., கூட்டணி கட்சிகளில் ஒன்றான லோக்ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், விவசாய அமைச்சராகப் போகிறார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆலோசனை நேற்று நடந்தது. டில்லியில் உள்ள குஜராத் பவனில் தங்கியிருக்கும் மோடி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான, பஞ்சாபின், சிரோன்மணி அகாலிதளம் தலைவர், முதல்வர், பிரகாஷ் சிங் பாதல், ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர் பாளர் ராம் மாதவ் ஆகியோர், பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர்.

தனி நபராக பிரதமர் இல்லத்தில்:

டில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், குடும்பத்துடன் இல்லாமல் தனித்து குடியேறும் முதல் பிரதமர் மோடி தான். இதற்கு முன் அனைத்து பிரதமர்களும், தங்கள், மனைவி, குழந்தைகளுடன் பிரதமர் இல்லத்தில் தங்கியிருந்துள்ளனர். முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, 'தீன்மூர்த்தி பவன் மாளிகையில், அவர் இறக்கும், 1964ம் ஆண்டு வரை வசித்தார்; அப்போது அது தான் பிரதமர் இல்லமாக இருந்தது.

 அதே இடத்தில் தான், நேருவுடன் இந்திரா, தன் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருக்கு பின் வந்த லால் பகதூர் சாஸ்திரி, ஜன்பத் சாலையில் உள்ள சிறிய பங்களாவில் குடும்பத்துடன் வசித்தார். பிரதமரான பிறகு, இந்திரா, சப்தர்ஜங் மார்க் சாலையின், 1ம் எண் வீட்டில் வசித்து வந்தார்; அந்த வீட்டில் தான் அவர், 1984ல் கொல்லப்பட்டார். அவருக்கு பின் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் மற்றும் சரண் சிங், பிரமாண்ட பங்களாக்களை தவிர்த்து, அரசு இல்லங்களில் தான் வசித்தனர். அதன் பிறகு, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள எண் - 7 வீடு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியதும், ராஜீவ் அந்த வீட்டில் தன் மனைவி சோனியா, வாரிசுகள் ராகுல், பிரியங்காவுடன், 1991ல் இறக்கும் வரை வாழ்ந்து வந்தார்.


 நரசிம்ம ராவ் பிரதமராகும் போது, மனைவியை இழந்திருந்தார். எனினும், அவருடன் அவர் குடும்ப உறுப்பினர்கள் சிலர் பிரதமர் இல்லத்தில் வசித்தனர். அது போல், பிரம்மச்சாரியான வாஜ்பாய், பிரதமராக இருந்த போது, வளர்ப்பு மகள் மற்றும் அவரின் குடும்பத்தினருடன், ரேஸ் கோர்ஸ் ரோடு வீட்டில் வாழ்ந்து வந்தார். மோடி திருமணமானவர் தான் என்ற போதிலும், அவரின் மனைவி ஜசோதா பென்னுடன் வாழ்க்கை நடத்தவில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக, மோடியின் சகோதரர் முன்னர் விளக்கம் அளித்திருந்தார்.

யார் இந்த நட்டா?


இமாச்சல பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா, எம்.பி., யாக, 2012ல் தேர்வாகியுள்ள நட்டா, 53, பீகாரில் பிறந்தவர். இவர் மனைவி, மல்லிகா, டாக்டராக உள்ளார். இந்த தம்பதிக்கு, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. பா.ஜ., மாணவர் அமைப்பான, ஏ.பி.வி.பி.,யில், நட்டா, தன் மாணவர் பருவம் முதல் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். மூன்று முறை, இமாச்சல பிரதேச எம்.எல்.ஏ.,வாகி, அமைச்சராகவும் இருந்துள்ளார். பா.ஜ.,வின் தேசிய தலைவராக இவர் நியமிக்கப்பட்டால், மிக இளம் வயதில் அந்த பொறுப்பை ஏற்றவர் என்ற பெருமையை பெறுவார்.