அமைச்சர் பட்டியல் குறித்து நரேந்திர மோடி ஆலோசனை

மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயாக கூட்டணி 336 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது. நாளை மறுநாள் நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்க இருக்கிறார். பாஜ மட்டும் 282 இடங்களில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு அளிக்கப்படும் என அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார். 
                                      

அமைச்சர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக பாஜ மூத்த தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார். மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி, சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்கா ஆகியோருக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு குறைந்த பட்சம் ஒரு கேபினட் மந்திரி, இரண்டு துணை மந்திரி கொடுக்கலாம் என பாஜ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜ கூட்டணியில் சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் தலா 18 மற்றும் 16 உறுப்பினர்களை வைத்துள்ளன. தெலுங்கு தேசம் குறைந்தது 4 அமைச்சர்கள் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. 

இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு இன்று மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். நாயுடுவுக்கு 4 கொடுத்தால் சிவசேனாவுக்கு அதைக் காட்டிலும் கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது. இதன் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயம் பாஜவுக்கு ஏற்பட்டுள்ளது. சிவசேனா தலைவர்களுடன் மோடி நேற்று பேச்சு வார்த்தை நடத்தினார். ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்திக்கு 6 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த கட்சிக்கு ஒரு கேபினட் அமைச்சரும், ஒரு துணை அமைச்சரும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ரயில்வே துறை வேண்டும் என பஸ்வான் கோரிக்கை வைத்துள்ளார். இதனை மோடி ஏற்கவில்லை என கூறப்படுகிறது. பஞ்சாபில் அகாலி தளம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் அமைச்சரவையில் சேர போவதில்லை என முன்னர் அறிவித்திருந்தது. இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேற்று பாஜ தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து பேசினார். 

அகாலி தளத்துக்கு ஒரு கேபினட் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஐ.மு.கூட்டணி அரசில் ஒரு கட்டத்தில் 70க்கும் அதிகமான அமைச்சர்கள் இருந்தனர். அந்த அளவுக்கு இல்லாமல் 50க்குள் அமைச்சர்கள் எண்ணிக்கையை அடக்க மோடி திட்டமிட்டுள்ளார். இதில் 25 கேபினட், அதே எண்ணிக்கைக்கு துணை அமைச்சர் பதவி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.