பாரத பிரதமர் நரேந்திரமோடிவரலாறு

ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு இன்று பதில் கிடைத்துள்ளது. ஜனநாயகத்தில் அனைத்து மக்களும் சமம்; மக்களே ஆட்சியாளர்களை தேர்வு செய்வர். இதன்படி சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, துணிச்சலான முடிவு, நேர்மறை எண்ணம் ஆகியவற்றால் நாட்டின் 15வது பிரதமராக இன்று பதவி ஏற்றார்.

                                          
இந்தியாவின் மேற்கில் குஜராத்தின் மேஹ்சனா மாவட்டத்தின் வத்நகரில் 1950, செப்.17ம் தேதி, நடுத்தர குடும்பத்தில் மோடி பிறந்தார். இவரது பெற்றோர் தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி -ஹீரா. பள்ளியில் படிக்கும் போதே "அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பில் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள், அரசியல் தொடர்பான கூட்டங்களில் அதிகமாக பங்கேற்க தொடங்கினார். இளம் வயதில் சகோதரருடன் இணைந்து "டீ' கடை நடத்தினர். ரயில் நிலையங்களில் டீ விற்றார். குஜராத் பல்கலைக்கழகத்தில் "அரசியல் அறிவியலில்' முதுநிலை பட்டம் பெற்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.


பொறுப்புகளுக்கு அசராதவர்: 1987ல் பா.ஜ., வில் சேர்ந்தார். 1995ல் ஐந்து மாநிலங்களுக்கு பா.ஜ., தேசிய செயலராக நியமிக்கப்பட்டார். பின் 1998ல் குஜராத் மற்றும் இமாச்சலில் நடந்த தேர்தலில், பா.ஜ., ,சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய பா.ஜ., தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார். இப்பணியை திறம்பட செய்து முடித்தார். குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் 2001 அக்., 6ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து எம்.எல்.ஏ., வாக கூட இல்லாத மோடி அக்., 7ல், முதல்வராக பதவியேற்றார். பின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 


"ஹாட்ரிக்' வெற்றி : மோடி முதல்வராக பதவியேற்ற போது, பூகம்பத்தின் பாதிப்பால் மாநிலம் பின் தங்கிய நிலையில் இருந்தது. பின் அடுத்தாண்டு நிகழ்ந்த வன்முறை சம்பவமும் மாநில வளர்ச்சியில் தடைக்கல்லாக அமைந்தது. இருப்பினும் தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட இவர், நாட்டிலேயே குஜராத்தை பல துறைகளிலும் முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டினார். 2002 , 2007, 2012 என தொடர்ந்து வெற்றி பெற்று, 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவரே. 


காந்திநகர் டூ டில்லி ; 2012 சட்டபை தேர்தல் வெற்றி விழாவில் பங்கேற்ற தொண்டர்கள், இவரை "அடுத்த பிரதமர்' என்று கோஷமிட்டனர். அவர்களின் நம்பிக்கையின் படி, 2013 செப்., 13ம் தேதி, கோவாவில் பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து தனது பணியை தொடங்கினார். இடைவிடாத பிரசாரம் மூலம் கோடிக்கணக்கான மக்களை சந்தித்தார். சாதாரணமாக இருந்த 2014 அரசியல் களம், மோடி அலையாக மாறியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை "நமோ' கோஷம் ஒலித்தது. மே 16ல் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. நாட்டு மக்களின் நம்பிக்கையுடன் மோடி இன்று பிரதமராகிறார்.