மேடை சரிந்தது நடிகை நமீதா காயமின்றி தப்பினார்

நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ரெட்டிப்பட்டி இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் ‘மண வாழ்க்கை‘ என்ற நாடகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நாடகம், நடிகர் பாக்யராஜ், நடிகை நமீதா ஆகியோர் முன்னிலையில் நேற்றிரவு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
                                           அதிக கூட்டம் திரண்டதால் மேடை சரிந்தது   நமீதா காயமின்றி தப்பினார்


இதையடுத்து நடிகர், நடிகையை பார்க்க ஏராளமானோர் நாடகம் நடைபெறும் மேடை முன்பு திரண்டனர். இரவு 9.30 மணிக்கு நடிகை நமீதா, மேடைக்கு வந்தார். அவரை அருகில் பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முண்டியடித்து மேடைக்கு வந்தனர். கூட்ட நெரிசலுக்கு மத்தியில் நமீதா மேடை ஏறினார்.

அந்த நேரம் திடீரென மேடை ஒருபுறமாக சரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த விழாக்குழுவினர் விரைந்து செயல்பட்டு, நடிகை நமீதாவை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு வீட்டில் தங்க வைத்தனர். மேடை சரிந்து விழுந்ததில் நடிகை நமீதாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. உடனே அங்குள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். நடிகைக்கு காயம் என்ற தகவல் கிடைத்தவுடன், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஆம்புலன்ஸ்களும் ரெட்டிப்பட்டி கிராமத்துக்கு விரைந்து வந்தன. ஆனால் நமீதா, தனக்கு காயம் எதுவுமில்லை வீட்டில் இருந்து வெளியே வர மறுத்து விட்டார். 

இதையடுத்து 3 ஆம்புலன்ஸ்களும் திரும்பிச் சென்றன. நமீதாவை எப்படியும் நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. விழா பாதுகாப்புக்கு வந்த போலீசார், ரசிகர்களை கட்டுப்படுத்தினர். இதற்கிடையில் விழாக் குழுவினர், சரிந்து விழுந்த மேடையை அவசர அவசரமாக அப்புறப்படுத்தி விட்டு, கோயில் அருகே மற்றொரு மேடை அமைத்தனர்.

தொடர்ந்து, புதிய மேடையில் நாடகத்தை தொடங்கி வைக்க வருமாறு நமீதாவை அழைத்தனர். மேடை சரிந்ததால் அப்செட் ஆன நமீதா, நாடகத்தை தொடங்கி வைக்க வர மறுத்து விட்டார். நடிகர் பாக்யராஜ் விழாவை தொடங்கி வைத்தார். இருவரும் தனித்தனி காரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர்.