ஏழை மாணவிக்கு கருணை காட்டிய முதல்வர்!

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண்களைப் பெற்ற ஏழை மாணவிகள் 3 பேர் உள்பட 4 பேருக்கு முதல்வரின் நிதி உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரை காக்கைப்பாடினியார் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.அனுசியா 494 மதிப்பெண் பெற்று மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடத்தைப் பிடித்தார். தாய், தந்தையை இழந்த இவர் தற்போது தாத்தா, பாட்டியுடன் மதுரை சின்னச் சொக்கிகுளத்தில் வசித்து வருகிறார். 
                                              சோகத்தில் இருந்து மகிழ்ச்சிக்கு மாறிய மாணவி அனுசியா.


அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை மூலமே இதுவரை அனுசியாவின் படிப்புச் செலவை அவரது தாத்தா, பாட்டி மேற்கொண்டு வந்தனர். ஆனால் மேல்படிப்புக்கு அந்த பணம் போதுமானதாக இருக்காது. எனவே மருத்துவராக விரும்பும் தனது லட்சியம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையில் அனுசியா கண்ணீர் வடித்த புகைப்படத்துடன் சனிக்கிழமை 'தி இந்து'வில் செய்தி வெளியானது.

இதைக்கண்ட தன்னார்வலர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள், கோயில் நிர்வாகக் குழுவினர், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அனுசியாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். பிடிஆர் கல்வி நிறுவனத்தினர் அனுசியாவின் வீட்டுக்கே சென்று, அவரது படிப்புச் செலவு முழுவதையும் ஏற்பதாக உறுதியளித்துள்ளனர். இதேபோல் மேலும் பலர் நேரிலும், செல்போன் மூலமும் தொடர்பு கொண்டு நிதி உதவி செய்வதாக உறுதியளித்துள்ளனர். இவற்றால், எப்படியும் மேல்படிப்பு படித்துவிட முடியும் என்ற நம்பிக்கை அனுசியாவின் மனதில் துளிர்விட்டிருக்கிறது.

விவரங்கள் சேகரிப்பு

இதேபோல் மாநகராட்சி பள்ளிகளில் முதலிடம் பெற்றிருந்த மற்றொரு மாணவியான கிருஷ்ண வேணியும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இதுதவிர பிளஸ் தேர்வில் 1129 மதிப்பெண் பெற்று மதுரை மாநகராட்சி பள்ளிகள் அளவில் மணிமாறன் என்ற மாணவர் இரண்டாமிடம் பெற்றிருந்தார். இவர் வெல்டிங் வேலை செய்துகொண்டே படித்து சாதனை படைத்தது பற்றியும், கல்வி உதவிக்காக ஏங்குவது குறித்தும் ஏற்கெனவே செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்தில் இருந்து இந்த 3 பேரின் விவரங்களை யும் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா மூலம் சனிக்கிழமை கேட்டுப் பெற்றுள்ளனர். இதுதவிர பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சங்கீதாவின் விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த 4 பேருக்கும் விரைவில் முதல்வரிடமிருந்து நிதி உதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவி அனுசியா கூறுகையில், அதிக மதிப்பெண் எடுத்திருந்தபோதும், மேல்படிப்பை தொடர முடியுமா என்ற பயம் வெள்ளிக்கிழமை முழுவதும் இருந்தது. ஆனால் சனிக்கிழமை அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. இவ்வளவு பேர் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள் என எதிர்பார்க்கவில்லை. தனியார் பள்ளிகளில்கூட சேர்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். அதேபோல் தமிழக அரசும், மாநகராட்சியும் உதவ முன்வந்துள்ளன. முதல்வருக்கும் வேண்டுகோள் கடிதம் அனுப்பியுள்ளேன். உதவ முன்வந்துள்ள முதல்வர், மேயர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி