தமிழக பா.ஜ.,வில் புதிய பந்தயம்

அறுதி பெரும்பான்மையுடன், மத்தியில் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைய உள்ள சூழ்நிலையில், தமிழக பா.ஜ.,வில் புதிய பந்தயம் ஆரம்பமாகி உள்ளது. கட்சி யின் கன்னியாகுமரி எம்.பி.,யும், மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சரானால், அவரது பதவிக்கு வரப் போவது யார் என்பது தான், அந்த பந்தயம். இதில், பல குதிரைகள் ஓடத் தயாராக இருந்தாலும், வெற்றிக் குதிரையை தேர்ந்தெடுக்க, மோடியின் பிரதிநிதி அமித் ஷா, விரைவில் தமிழகம் வர உள்ளதாக தெரிகிறது.

                                         

ஆளும்கட்சி செல்வாக்கு:பா.ஜ., கட்சியில், ஒருவர் இரண்டு பதவியில் இருக்க முடியாது. அதனால், மாநில தலைவராக இருப்பவர், மத்திய அமைச்சராகும் பட்சத்தில், அவர், மாநில தலைவர் பதவியை இழக்க நேரிடும். இந்த தேர்தலில், பா.ஜ., சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமே வெற்றி பெற்று, எம்.பி.,யாகி உள்ளார். மத்திய அமைச்சரவையில், தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் விதத்தில், அவர் அமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. இந்த சூழ்நிலையில், அடுத்த தமிழக தலைவர் யார் என்ற கேள்வி, தமிழக பா.ஜ,,வில் எழுந்துள்ளது. 

பொன்.ராதாகிருஷ்ணனின் பதவிக் காலம், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதன்பின், புதிய தலைவர் பொறுப்பேற்றாக வேண்டிய கட்டாயமும், கட்சியில் உள்ளது. ஏனென்றால், இரண்டு முறை மட்டுமே, ஒருவரால் தலைவர் பதவியில் நீடிக்க முடியும். பொன்.ராதாகிருஷ்ணனின் பதவிக் காலம், இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்டு, முடியும் தருவாயில் உள்ளது. மேலும், மத்தியில் ஆளுங்கட்சியாக பா.ஜ., செல்வாக்கு பெற்றுள்ள நிலையில், மாநில தலைவராக இருப்பவருக்கு, அதிக அதிகாரம் கிடைக்கும் என்பதால், புதிய தலைவருக்கான போட்டி, கடுமையாக இருக்கும் என்பது உறுதி.


தமிழகத்தில் பா.ஜ., வின் கடந்த கால வரலாற்றை பார்த்தால், பல தலைவர்கள் வந்து போயுள்ளனர். டாக்டர் சந்திரபோஸ், கிருபாநிதி, சி.பி.ராதாகிருஷ்ணன் தலைவர்களாக இருந்த காலக் கட்டத்தில், கட்சியின் கட்டுப்பாடு முழுக்க, இல.கணேசன் கையில் தான் இருந்தது. அவர், மாநில தலைவராக இருக்கிறாரோ இல்லையோ, கட்சியில் அவரது கையே எப்போதும் ஓங்கி இருக்கும்படி, பார்த்துக் கொண்டார். 

அதனால், மாநில தலைவராக இருப்பவர், பொம்மை போல் செயல்பட வேண்டிய நிலைமையும் காணப்பட்டது. அப்போதே, தலைவர் பதவிக்கு இல.கணேசனுக்கு எதிராக நின்றவர், எச்.ராஜா. அவர், இந்த முறையும் கடுமையாக முயற்சி செய்வார் என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவருக்கு கட்சியில் போதிய ஆதரவு கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. 

எதையும் வெளிப்படையாக விமர்சித்து வரும் அவர், சமீபகாலமாக கட்சி யில் பேச வேண்டிய விஷயங்களை, சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுகிறார் என்ற புகார், அவர் மீது வாசிக்கப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக, கட்சியின் முக்கிய பொறுப்பான, அமைப்பு பொதுச் செயலராக இருக்கும் மோகன்ராஜூலு, தலைமை பதவியை பிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகிறார். 

முரளீதர் ராவ் உள்ளிட்ட மேலிட தலைவர்கள் சிலரும், இவருக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என, தெரிகிறது. தேசிய செயலராக இருக்கும், தமிழிசை சவுந்தரராஜன் பெயரும் போட்டியில் உள்ளது. மேலிட நிர்வாகிகள் ஆதரவு உடன், அவர் தேசிய பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதை போல, மாநில தலைமை பதவியை, அவரால் பெற முடியுமா என்பது தெரியவில்லை. 


கோவையில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ள போதிலும், அதிக ஓட்டுகள் பெற்று, கட்சியினருக்கு அங்கீகாரம் தேடித் தந்துள்ளதை காட்டி, சி.பி.ராதா கிருஷ்ணனும், இந்த பந்தயத்தில் குதித்து இருப்பதாக தகவல். இவர்களுக்கு இடையில், இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தானே, சீனியர் யாரையாவது, இடைக்கால தலைவராக நியமித்து விடலாம் என, கட்சி மேலிடம் கருதினால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, இல.கணேசனும், கே.என்.லட்சுமணனும் காய் நகர்த்த காத்திருக்கின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு...:தலைவர் பதவியில், இளம் தலைமுறையினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற குரலும், கட்சிக்குள் வெகுவாக எழுந்திருக்கிறது. அந்த வகையில் கட்சியின் மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் போன்றோர் பெயரும், பரிசீலனையில் இருப்பதாகவும் சொல்கின்றனர். இப்படி பல தரப்பிலும், மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்த்து, காய் நகர்த்தலில் இருக்க, யாரை தலைவராக்குவது என்கிற விவகாரத்தில், ஆர்எஸ்எஸ்., இயக்கத்தின் கருத்தும் மதிக்கப்படும்.

இதையெல்லாம் விட, தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்தி, சட்டசபை தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டும் என்பதில், மோடி மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. உ.பி.,யில் எப்படி பா.ஜ., வெற்றி வாகை சூடியதோ, அதுபோல் ஒரு அதிரடி மாற்றத்தை, தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் எனவும், அவர் விரும்புகிறார். எனவே, அவரது வலது கரமாக விளங்கும், அரசியல் சூத்திரதாரியான அமீத் ஷாவின் பொறுப்பில், தமிழகம் ஒப்படைக்கப்படலாம் என, பா.ஜ., மேலிட வட்டாரத் தகவல் கூறுகின்றது.