என்ன நடக்கிறது 'தாரை தப்பட்டை'யில்?

தனது பாத்திரத்திற்கு சசிகுமார் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருவது தான் 'தாரை தப்பட்டை' படப்பிடிப்பு துவங்காததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.'பரதேசி' படத்தினைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலெட்சுமி சரத்குமார் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'தாரை தப்பட்டை'. இப்படத்தின் இசைக்காக மீண்டும் இளையராஜாவுடன் கூட்டணி சேர்கிறார் பாலா. செழியன் ஒளிப்பதிவு செய்ய, சசிகுமார் - பாலா இருவருமே இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.
                                     சசிகுமார்

இப்படத்திற்காக 12 பாடல்களை 6 நாட்களில் முடித்துக் கொடுத்துவிட்டார் இளையராஜா. மார்ச் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு என்று அறிவித்தார்கள். ஆனால் படப்பிடிப்பு இன்னும் துவங்காமல் இருக்கிறது.

ஏன் ஏன்று விசாரித்த போது, "இயக்குநர் பாலா படத்திற்கான மொத்த திரைக்கதை, பாடல்கள் என அனைத்தையும் முடித்து விட்டாராம். நாளைக்கு படப்பிடிப்பு என்றால் கூட போகலாம் என்று அனைவரும் தயாராக இருக்கிறார்கள்.

நாயகனாக நடிக்க இருக்கும் சசிகுமார், படத்தில் தனது வேடத்திற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். நாதஸ்வரம், மிருதங்கம் உள்ளிட்ட பயிற்சி, கரகாட்டாம் பயிற்சி என்று தீவிரம் காட்டி வருகிறார்.

படத்தில் சசிகுமாரின் கெட்டப் என்ன என்பதை முடிவு செய்துவிட்டார் பாலா. தற்போது தாடி வளர்த்து இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கும் சசிகுமார், பயிற்சிகள் முடித்து படப்பிடிப்பு கிளம்பும் நேரத்தில் படத்தின் கெட்டப்பிற்கு ஏற்றவாறு மாற இருக்கிறார்" என்றார்கள்
.