போன் செய்யலாம், பேசலாம் ஸ்மார்ட் போன் வாட்ச் வருகிறது

கைக்கடிகாரத்தை மொபைல் போன் போல பயன்படுத்த முடியுமா? இப்படிப்பட்ட வசதிகளுடன் ஸ்மார்ட் கடிகாரம் கொண்டுவர சாம்சங் திட்டமிட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் ஏற்கனவே கேலக்ஸி கியர் 2, கேலக்ஸி கியர் 2 நியோ, கேலக்ஸி கியர் ஃபிட் என மூன்று ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்திருந்தது. 
                            


இவற்றில் கேலக்ஸி கியர் ஃபிட் தவிர மற்ற இரண்டும் ஸ்மார்ட் போனுடன் புளூடூத் மூலம் இணைக்கப்பட்டிருந்தால், வருகிற அழைப்பை பேசலாம். கியர் 2வில் 2 மெகா பிக்சல் கேமராவும் உண்டு. கடந்த 2014 முதல் காலாண்டில் மட்டும் சாம்சங் நிறுவனம் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் வாட்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் வாட்ச்களில் பேசும் வசதியை ஏற்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளது. 

மற்றவை ஸ்மார்ட் போன்களுடன் இணைத்தால்தான் பேசமுடியும் என்பதுபோல் அல்லாமல், இவை தனியாகவே ஸ்மார்ட் போனாக இயங்கும் திறன் கொண்டவையாக இருக்கும். அழைப்பு வரும்போது இந்த வாட்ச் கட்டியிருக்கும் கையை காதுக்கு அருகே வைத்து பேசலாம். எனவே, சிம்கார்டு பொறுத்தும் வசதியுடன் இது இருக்கும் எனவும், இன்னும் ஓரிரு மாதங்களில் இது சந்தைப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.