பிரதமராக பதவியேற்பதற்கு முன்பாகவே பாராட்டுகளை அள்ளும் மோடி

நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி வரும் 26ம் தேதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், பதவியேற்பதற்கு முன்பாகவே தனது செயல்பாடுகளின் காரணமாக, எதிர்க்கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நரேந்திர மோடிசமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 336 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
                                             

 நரேந்திர மோடி தலைமையில் அமையவுள்ள இந்த அரசு வரும் 26ம் தேதி பதவியேற்கவுள்ளது. இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பதவியேற்பு விழாவிற்கு வருமாறு, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட சார்க் நாடுகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மோடியின் இந்த அழைப்பு பல்வேறு தரப்பினரிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பலவீனமான வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி, அண்டை நாடுகளுடன் வலுவான உறவுகளை மோடி ஏற்படுத்துவார் என அரசியல் நோக்கர்கள் பாராட்டுகின்றனர்.

பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதை, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, எதிர்க்கட்சித் தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வரவேற்றுள்ளனர். இது தங்களுக்கு மிகுந்த இன்ப அதிர்ச்சியை அளிப்பதாகவும், இதை பயன்படுத்தி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண மோடி முயல வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதே போல், நேற்று பார்லிமென்ட் மைய மண்டபத்தில் மோடி ஆற்றிய உரைக்கு எதிர்க்கட்சியினரும் கூட பாராட்டு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்.பி., சசி தரூர் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் மோடி ஆற்றிய உரை தன்னை மிகவும் உணர்ச்சிவயப்படுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார். மோடியின் திட்டங்களை அவர் செயல்படுத்தி, அதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதன் பயன் சென்றடைய நாமும் பாடுபடவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்லிமென்ட் மைய மண்டபத்தில் மோடி ஆற்றிய உரையில், ஏழைகளின் வாழ்க்கை உயர அரசு சிந்திக்கும். உழைக்கும் என்று தெரிவித்திருந்தார். இளைஞர்களுக்காகவும், மகளிருக்காகவும் பாடுபடப்போவதாக தெரிவித்திருந்தார். அவரது பிரதமர் பதவிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களுடைய ஆசைகளும் நிறைவேற வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.