தேர்தல் ஆணையம் மாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மீண்டும் அதே பதவி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீண்டும் பழைய பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

                                         
 இப்போது, தேர்தல் முடிவு வெளியாகி உள்ள நிலையில், அந்த அதிகாரிகள் மீண்டும் பழைய பதவிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு தலைமை செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழக மருத்துவ பணிகள் வாரியத்தின் மேலாண் இயக்குநர் கே.மகர பூஷணம் சேலம் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். 

அரசு தொழிற்சாலைகள் துறையின் துணை செயலாளர் டாக்டர்.ஆர்.நந்தகோபால் வேலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் டாக்டர் வி.கே.சண்முகம், ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.சேலம் மாவட்ட கலெக்டர் ஹனிஷ்சாப்ரா, அந்த பதவியில் இருந்து மாற்றப்பட்டு தொழில் துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ தமிழ்நாடு மருத்துவ பணிகள் வாரியத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.மதுமதி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது தவிர, அரசு தொழில்துறை இணை செயலாளர் ஜெ.குமரகுருபரன், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநராக நியமிக்கப்பட் டுள்ளார். அந்த பதவியில் இருந்த மகேஷ் காசிராஜன் தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.