திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற இளைஞர்

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை கத்திரிக்கோலால் 30 முறை குத்திக் கொன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட பெண்ணின் உடல் 7 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளது. பல்ஜீத் கௌர் (23) என்ற பெண்ணை கொலை செய்ததை கொலையாளி அனீஷ் (39) ஒப்புக் கொண்டுள்ளார்.
                                           

கடந்த ஏப்ரல் 23ம் தேதி அனீஷ், பல்ஜீத் கௌரை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அனீஷ்,கௌரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால், வயது வித்தியாசத்தைக் காரணைம் காட்டி கௌர் அனீஷின் விருப்பத்தை நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அனீஷ், அவரை வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் 30 முறை குத்திக் கொன்று கொலை செய்துவிட்டு வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து, கௌரின் பெற்றோர், மகளைக் காணவில்லை என்று கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், அனீஷை கைது செய்தனர். கொலையாகி 7 நாட்களுக்குப் பிறகு, அனீஷின் வீட்டில் இருந்து கௌரின் உடல் கைப்பற்றப்பட்டது.