பாஸ்வேர்டை மாற்றச்சொல்லி EBAY வலியுறுத்தல்

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த இ-பே நிறுவனம் தனது 14.50 கோடி வாடிக்கையாளர்களின் சங்கேத வார்த்தையை (பாஸ்வேர்ட்) மாற்றச் சொல்லி வலியுறுத்தியுள்ளது.தங்களது இணையதளத்தில் சைபர் தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து தகவல் உள்ளிட்ட விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்டை மாற்றச் சொல்லியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

                                       
பாஸ்வேர்டை மாற்றுவது வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரையிலான காலத்தில் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் குறிப்பாக பெயர், பாஸ்வேர்ட், இணையதள முகவரி, வசிப்பிட முகவரி, தொலைபேசி எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் சைபர் தாக்குதல் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இது குறித்து இ-பே நிறுவனம் விரிவாக ஆராய்ந்ததோடு இதற்கான சாத்தியக்கூறுகளையும் பரிசீலித்தது. முடிவில் அவ்விதம் சைபர் தாக்குதல் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும் வாடிக்கையாளர்களின் கடன் அட்டை உள்ளிட்ட விவரங்களை மோசடிப் பேர்வழிகள் கம்ப்யூட்டர் மூலம் ஊடுருவி திரட்டியிருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை என்பது தெரியவந்தது.

வாடிக்கையாளர்களின் கடன் அட்டை விவரங்கள் வேறு வடிவில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்படுவதால் அதற்கான வாய்ப்பில்லை என்றும் இ-பே வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் பாஸ்வேர்ட் மாற்றிக் கொள்வது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக இ-பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல பே-பால் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களின் விவரம் எதுவும் அந்நியர்களால் திருடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இபே வாடிக்கையாளர்களுக்கு பாஸ்வேர்டை மாற்றுவது தொடர்பான அறிவிப்பு அவர்களது இணையதள முகவரி மூலம் தெரிவிக்கப்பட உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் இ-பே இணையதளத்தில் பயன் படுத்தும் பாஸ்வேர்டையே பிற இணையதள முகவரியிலும் பயன்படுத்தினால் அவற்றையும் மாற்றும்படி வலியுறுத்தியுள்ளது.வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களைக் காக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இது போல தகவல் திருட்டு மிகப் பெருமளவில் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அடோப் சிஸ்டம் நிறுவனத்தின் தளத்திலும் சைபர் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியானது. இதில் 15 கோடி வாடிக்கையாளர்களின் கணக்குகள் திருடப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அந்நிறுவனம் இதைப்போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இப்போது இ-பே நிறுவனமும் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.