இளம்பெண்களை அழைத்து வந்து ஆன்லைன் மூலம் பாலியல் தொழில்

வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களை ஆன்லைனில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களிடம் அனுப்பி பாலியல் தொழில் செய்து வந்த 5 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
                                                  

சென்னையில் ஆன்லைன் மூலம் சில புரோக்கர்கள் பாலியல் தொழில் செய்து வருவதாகவும், இதற்காக வெளி மாநில இளம்பெண்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து பெரும் பணம் சம்பாதிப்பதாகவும் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து, உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில் பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கினர்.

நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடியில் திடீர் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த பாலியல் புரோக்கர்கள் பெங்களூர் ஜாகீர் (24), ரபீக் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார். இதுபோல, தி.நகர் ரயில்வே பார்டர் சாலையில் உள்ள பங்களா ஒன்றில் சோதனையிட்டபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த விஜய் (20) என்பவர் கைது செய்யப்பட்டார். அங்கிருந்து ஆந்திரா மற்றும் சென்னையை சேர்ந்த 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், பூந்தமல்லியில் உள்ள மசாஜ் செண்டரில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது கேரளாவை சேர்ந்த புரோக்கர் மனோஜ் (36), நாசர் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டார். கைது செய்யப்பட்ட 5 புரோக்கர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 4 இளம் பெண்களும் மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு வெளி மாநிலத்தில் இருந்து இளம்பெண்களை விமானம் மூலம் அழைத்து வந்து சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.