பத்ராவதி அருகே 12 அடி ராஜநாகம் பிடிப்பட்டது

கர்நாடக மாநிலம் பத்ராவதி அருகே பொம்மனகட்டேஇரியூர் புறநகரை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவருடைய வீட்டின் முன் உள்ள செடிக்குள் காலையில் 12 அடி நீளமுள்ள ஒரு ராஜநாகம் இன்னொரு பாம்பை உணவாக சாப்பிட்டுவிட்டு எங்கும் ஊர்ந்து செல்ல முடியாமல் படுத்து கிடந்தது. 

இது குறித்து அவர் அக்கம் பக்கத்தினரிடம் கூறினார். இதையடுத்து ராஜநாகத்தை பார்ப்பதற்காக அவருடைய அக்கம் பக்கத்தினர் ஆர்வமுடனும் ஒருவித பதற்றத்துடனும் அங்கு கூடினார்கள். பின்னர் அவர்கள் சிமோகா பாம்பு பிடி வீரர் கிரணுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த கிரண் அந்த 12 அடி ராஜநாகத்தை லாவகமாக பிடித்தார். அப்போது அந்த ராஜநாகம் உணவாக விழுங்கியிருந்த ஒரு பாம்பு அதன் வாயில் இருந்து கீழே விழுந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். பின்னர் அந்த ராஜநாகத்தை பாம்பு பிடி வீரர் கிரண் சிமோகா வனப்பாதுகாப்பு இலாகா அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.