வீட்டுக்குள் தாய்–2 குழந்தைகள் கழுத்தை அறுத்து கொடூர கொலை காரணம் என்ன?

கோவையில் வீட்டுக்குள் தாய்–2 குழந்தைகள் கழுத்தை அறுத்து கொன்றனர். இந்த கொலைகளுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தனியார் கம்பெனி ஊழியர்கோவை சத்திரோட்டில் உள்ள கணபதி ராமகிருஷ்ணாபுரம் ரங்கநாதர் வீதியை சேர்ந்தவர் மருத மாணிக்கம் (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

                                            
 இவரது மனைவி வத்சலா தேவி (27). இவர்களுக்கு முகிலன் (7) மற்றும் பிரணித் என்ற 11 மாத ஆண் குழந்தையும் இருந்தனர். மருதமாணிக்கத்தின் தாயார் கோவிந்தம்மாள் (51) என்பவரும் அவர்களுடன் இருந்தார்.

கோடை விடுமுறை என்பதால் வத்சலாதேவி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று பள்ளிக்கூடம் திறப்பதால் அவர், அங்கிருந்து புறப்பட்டு குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டுக்கு வந்திருந்தார்.

தாய்– 2 குழந்தைகள் படுகொலை

இந்த நிலையில் தனது மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வந்துவிட்டதை அறிந்ததும், கணபதி மணியக்காரன்பாளையம் பகுதியில் உறவினர் வீட்டுக்கு சென்ற மருதமாணிக்கத்தின் தாய் கோவிந்தம்மாள்(51) நேற்று மாலை 6 மணிக்கு, மகன் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியல் அறைக்கு வெளியே ரத்தம் வழிந்துள்ளதை கண்டு திடுக்கிட்டு, அந்த குளியறை கதவை திறந்தார்.

 அப்போது அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மருமகள் வத்சலாதேவி கீழே சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தமாள் அலறிக்கொண்டே வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு 2 குழந்தைகளின் கழுத்து அறுக்கப்பட்டும், வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதை பார்த்ததும் அவர் ‘அய்யோ, கடவுளே’ என்று கூக்குரலிட்டபடி வெளியே ஓடிவந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

போலீஸ் கமிஷனர் நேரில் விசாரணை

இது குறித்து அக்கம், பக்கத்தினர் சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் ராஜா சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது, அந்த நாய் அங்கிருந்து சிறிது தூரம் ஓடிவிட்டு மீண்டும் அதே இடத்துக்கே திரும்பி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வரழைக்கப்பட்டனர். அவர்கள் படுக்கை அறை, குளியல் அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர்.

இதற்கிடையே இது பற்றி அறிந்ததும் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், துணை கமிஷனர் பிரவேஸ்குமார், உதவி கமிஷனர் பாஸ்கரன் ஆகியோரும், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட 2 குழந்தைகள் மற்றும் தாய் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவரிடம் விசாரணை

கொலை செய்யப்பட்ட வத்சலா தேவியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலிச்சங்கிலி மட்டும் பறிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அணிந்து இருந்த கம்மல், மற்றும் மோதிரம் அப்படியே இருந்தன. இந்த நிலையில் நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. இதற்கிடையில் குழந்தைகளும், மனைவியும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உள்ளதால், நகைக்காக கொலை நடந்து இருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த சில மணிநேரம் கழித்து கணவர் மருதமாணிக்கம் அங்கு வந்துள்ளார். 

இதைத் தொடர்ந்து அவருக்கும், இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதே காம்பவுண்டில் மதுரையை சேர்ந்த செந்தில் என்பவர் குடும்பத்துடன் தங்கி இருந்தார். கணவன்–மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையால் அந்த வீட்டை காலி செய்யும்படி மருதமாணிக்கம் குடும்பத்தினர் வற்புறுத்தியதால் செந்தில் தனது குடும்பத்தினருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் அங்கு 3 கொலைகள் நடந்து இருப்பதால் இது தொடர்பாக செந்திலிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

தாய் மற்றும் 2 குழந்தைகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.