பி.எஸ்.எல்.வி. சி- 23 ராக்கெட்: 49 மணிநேர கவுண்டவுன் தொடக்கம்!!

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை மறுதினம் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி. சி -23 ராக்கெட்டுக்கான 49 மணிநேர கவுண்டவுன் இன்று தொடங்கியது. ராக்கெட் ஏவப்படுவதைக் காண மோடி வருகை தர உள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டின் ஸ்பாட் 7, கனடா நாட்டின் இரண்டு செயற்கைகோள் உள்ளிட்ட 5 செயற்கைகோள்களை தாங்கிச் செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட், திங்கட்கிழமையன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டுக்கான 49 மணிநேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது.

இஸ்ரோ சார்பில் வணிக பயன்பாட்டிற்காக அனுப்பப்பட உள்ள இந்த ராக்கெட் வரும் திங்கட்கிழமை காலை 9 மணி 52 நிமிடங்களுக்கு விண்ணில் பாய இருக்கிறது. ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஸ்ரீஹரிகோட்டா வருகை தர உள்ளார். இதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.