குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து 27 பெண்களை சீரழித்த வாலிபர்

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து 20க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி படம் பிடித்தவரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அவர் பயன்படுத்திய லேப்டாப், செல்போன்களை பறிமுதல் செய்து ஆபாச படங்கள் உள்ளதா என தீவிர விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கில் முன்னாள் எம்எல்ஏ மகன் உள்பட மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 


மதுரை ஆனையூர் முடக்கத்தான் சாலையை சேர்ந்த சந்திரமோகன் மகள் ரெஜினா (24). இவர் திண்டுக்கல் எஸ்பியிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: குளிர்பானத்தில் மயக்க மருந்து பிகாம் பட்டதாரியான நான் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் வசிக்கும் எனது சகோதரி வீட்டிற்கு அடிக்கடி வருவேன். அங்கு என்னை திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் பொன்சிபி சந்தித்து காதலிப்பதாக கூறினார். 

நான் மறுத்தும் பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு கதறினார். இதனால் மனம் மாறி அவரை காதலித்தேன். பொன்சிபி தனது வீட்டிற்கு என்னை அழைத்து சென்றார். தாயாரிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறியவர், குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து என்னை பலாத்காரம் செய்தார். இப்படி செய்து விட்டாயே எனக்கூறி கதறியபோது ‘திருமணம் செய்து கொள்ளப்போகும் நமக்குள் என்ன நடந்தால் என்ன‘ என்றார்.

 சில நாட்களில் மீண்டும் தொடர்புகொண்டு வீட்டிற்கு அழைத்தார். நான் மறுத்தபோது, ஏற்கனவே என்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதாக கூறி மிரட்டினார். வேறு வழியில்லாத நான் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினேன். இதனால் 30.5.2013ல் திண்டுக்கல் பெருமாள் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் பொன்சிபியை திருமணம் செய்துகொண்டேன்.

வீட்டில் மது விருந்து

மூன்று மாதங்கள் அவரது வீட்டிலேயே வாழ்ந்து வந்தேன். திருமணம் குறித்த தகவல் அவரது தாய் ஹேமமாலினிக்கு தெரிந்ததும், என்னை வீட்டைவிட்டு விரட்டிவிடும்படி பொன்சிபியிடம் கூறினார். இதிலிருந்து பொன்சிபி என்னை கொடுமைப்படுத்த துவங்கினார். எனது 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தாயும், மகனும் கொடுமைப்படுத்தினர். பொன்சிபி தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மது அருந்துவார்.

 இதை தட்டிக்கேட்டதால் பிரச்னை ஏற்பட்டது. எங்களுக்குள் ஒரு நாள் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் மட்டையால் என்னை தாக்கியதில் 3 மாத கரு கலைந்தது. இதனால் உயிருக்கு பயந்து என் வீட்டிற்கு சென்றுவிட்டேன். பொன்சிபி, தாயார் ஹேமமாலினி, தேனி முன்னாள் எம்எல்ஏ பொன்னுப்பிள்ளையின் மகன் ராஜா என்ற ஞானராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார். எஸ்பி உத்தரவின் பேரில் பொன்சிபி, ஹேமமாலினி, ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொன்சிபி மீது வரதட்சணை கேட்டு பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து, மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது தாயார் ஹேமமாலினி, ராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன்சிபியிடமிருந்து லேப்டாப், மொபைல்போன்களை பறிமுதல் செய்து அவரை தேடினர்.

தனிப்படை போலீசார் கரூர் ரயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவில் பொன்சிபியை சுற்றிவளைத்து கைது செய்தனர். திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

பெண்களுடன் ஜாலி

பொன்சிபி அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கும் தகவல்களாக போலீசார் கூறியதாவது: தந்தை சங்கரதாஸ் சில ஆண்டுகளுக்குமுன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் தாயார் ஹேமமாலினியுடன் வசித்து வந்தேன். அம்மாவிற்கு தேனி தொகுதி முன்னாள் எம்எல்ஏயின் மகன் ராஜாவுடன் நெருக்கமான பழக்கம் இருந்தது. இது எனக்கு பிடிக்காததால் அம்மாவுடன் அடிக்கடி தகராறு செய்தேன். இதனால் அவர் என்னை விட்டுவிட்டு சென்னைக்கு சென்றார். நான் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் ஸ்ரீநகரில் சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தேன். நண்பர்கள் கபிலன், கஜா உள்ளிட்ட பலர் உள்ளனர். அடிக்கடி நண்பர்கள் வீட்டிற்கு வருவார்கள். அவர்களுடன் வீட்டிலேயே மது அருந்தி ஜாலியாக இருப்போம். 

அவ்வப்போது பெண்களையும் அழைத்து வருவேன். சென்னையில் இருக்கும் தாயார் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் எனது செலவிற்காக அனுப்பிவிடுவார். இதில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தேன். மேலும் பணம் தேவை என்றாலும் கேட்டு வாங்குவேன். ரூ.1.75 லட்சத்தில் ஒரு பைக் வாங்கினேன். இதில் பெண்களை ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றுவேன். பெண்களுடன் நெருங்கி பழகி, ஜாலியாக இருப்பதை மிகவும் விரும்பினேன். நண்பர்கள் மூலம் பெண்கள் பலருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு அதிகமாக கிடைத்தது.
மிரட்டி உல்லாசம் மதுரையை சேர்ந்த ரெஜினா பாலகிருஷ்ணாபுரத்திலுள்ள தனது அக்கா வீட்டிற்கு கடந்தாண்டு வந்தார்.

இவரை பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே கேட் அருகே பார்த்தேன். அவருக்கு பின்னால் சென்று பைக்கை ரேஸ் செய்து சாகசம் செய்து காட்டினேன். உன்னை மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னேன். இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சென்ற ரெஜினா, மறுநாள் அதே நேரத்தில் என்னை சந்தித்து சிரித்தார். பின்னர் அவரது முகவரியை பெற்றுக்கொண்டு, மதுரைக்கே ரெஜினாவை தேடி அவருடைய வீட்டிற்கு சென்றேன். இதனால் அவர் என்னை முழுமையாக நம்பினார். 2 நாட்கள் தொடர்ந்து போனில் ரெஜினாவுடன் பேசினேன். பின்னர், எனது தாயார் ரெஜினாவை பார்க்க விரும்புவதாக கூறி வீட்டிற்கு வரவழைத்தேன். வீட்டிற்கு வந்த ரெஜினா, தாயார் இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து கேட்டபோது வந்துவிடுவார் எனக்கூறி சமாளித்தேன். அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தேன். அதை அருந்தியதும் மயங்கி விழுந்தார். அவரை பலாத்காரம் செய்தேன். மயக்க நிலையில் இருந்த ரெஜினாவை ஆபாசமாக எனது மொபைல் போனில் படம் பிடித்தேன். இதுபோன்று பல பெண்களை அனுபவித்து விட்டு ஆபாசமாக படம் பிடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தை வைத்தே அந்த பெண்களை மிரட்டி எனது வீட்டிற்கு அவ்வப்போது அழைத்து உல்லாசமாக இருப்பேன்.
ரெஜினா கடந்த மாதம் எஸ்பியிடம் புகார் அளித்தார்.

இந்த தகவல் வெளியானவுடன், எனது வீட்டை காலி செய்தேன். நந்தவனப்பட்டி என்எஸ் நகரிலுள்ள வாடகை வீட்டிற்கு இடம் மாறினேன். இதன் பின்னர் என்னைப்பற்றி பலவாறு செய்திகள் வெளியாகின. ரெஜினாவே இதை பரப்பினார். இதனால் திண்டுக்கல்லை காலி செய்துவிட்டு வெளியூர் சென்றேன். 2 நாட்களுக்கு முன்பு என்மீது வழக்கு பதிவு செய்தது தெரிந்தது. சூட்கேசில் துணிகளை எடுத்துக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து ரயில் மூலம் கோவை சென்றேன். 

பின்னர் அங்கிருந்து வேறு ரயிலில் திருச்சி சென்றேன். அங்கிருந்து ரயிலிலேயே கரூர் சென்றேன். 3 நாட்களாக ரயிலிலேயே மாறி, மாறி சுற்றினேன். நேற்றுமுன்தினம் இரவில் மதுரை செல்ல கரூர் ரயில் நிலையத்தில் நின்றிருந்தேன். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த போலீசார் விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணான தகவல் சொல்லியதால் சிக்கிக்கொண்டேன். திண்டுக்கல் போலீசாருக்கு தகவல் அளித்து, அவர்கள் வந்து கைது செய்தனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சிக்கிய 27 பெண்கள்

விசாரணை முழுவதையும் போலீசார் வீடியோவில் பதிவு செய்து ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பொன்சிபிக்கு வயது 19 ஆவதால், திருமணச் சட்டப்படி மைனர் என்பதால், மேலூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப சையது சுலைமான் உசேன் உத்தரவிட்டார். பொன்சிபி குறித்து வெளியாகும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்து ஆபாச படங்களை எடுத்து வைத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளது விசாரணையில் தெரிந்துள்ளது. எத்தனை பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்துள்ளார் என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சுவிட்ச் ஆப் மொபைல்கள்

போலீசார் மேலும் கூறுகையில், ‘‘ரெஜினா மட்டுமின்றி ஏராளமான பெண்களுடன் பொன்சிபி தொடர்பு வைத்திருந்துள்ளார். இதில் 20க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்களை எடுத்து வைத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார். போனில் ஏராளமான பெண்களின் எண்கள் உள்ளன. இதில் உள்ள எண்களுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது, அந்த எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஆபாச படங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ரெஜினாவை தவிர வேறு புகார்கள் ஏதும் வரவில்லை. தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி விசாலாட்சிக்கும் ரெஜினா புகார் அளித்தார். அதில், எப்சிபா, ஜெயப்பிரதா, அனுஷியா, சித்ரா, மகாலட்சுமி உள்ளிட்ட பல பெண்களுடன் பொன்சிபிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக புகாரில் கூறியிருந்தார். இது குறித்தும் விசாரித்து வருகிறோம்,’’ என்றனர்.

‘இது சாதாரண படம்தான்’

நண்பர் ஒருவரின் மனைவி அருகே பொன்சிபி நெருக்கமாக அமர்ந்துள்ள போட்டோ கிடைத்தது. இதுகுறித்து அவரது நண்பர் போலீசாரிடம் கூறுகையில், ‘நானும், பொன்சிபியும் நெருங்கி பழகுவோம். வீட்டில் பிள்ளை போல் அவரை வளர்ப்போம். என் மனைவியை அண்ணி என பொன்சிபி அழைப்பான். எனது மனைவியுடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோ சாதாரணமாக எடுக்கப்பட்டதுதான்’ என்றார்.