நாட்டின் 29வது மாநிலமாக நள்ளிரவில் தெலங்கானா உதயம்

நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா நேற்று நள்ளிரவு உதயமானது. முதல்வராக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சந்திரசேகர ராவ் முதல்வராக பொறுப்பேற்கிறார். ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்க வலியுறுத்தி பல ஆண்டு களாக போராட் டம் நடந்தது. இதில் ஆந்திர மாநிலத்தின் அரசியல் கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தது.                                           

 தெலங்கானா மாநிலத்தை அமைக்க கோரி நடந்த போராட்டத்தின் போது பலர் தற்கொலை செய்து கொண்டனர். போராட் டம் உச்சகட்டத்தை எட்டியதால், தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் கடும் அமளியை ஏற்படுத்தியது. மிளகு ஸ்பிரே அடிக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அனைத்து எதிர்ப்புகளையும் மீறி ஆந்திர மாநிலம் சீமாந்திரா, தெலங்கானா என 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியின் கிரண் குமார் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆந்திராவில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

 உச்ச மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒருங்கிணைந்த ஆந்திராவில் மாநகராட்சி, நகராட்சி, ஜில்லா பரிஷத், மண்டல பரிஷத் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து நாடாளுமன்ற சட்ட மன்ற தேர்தல்கள் நடைபெற்றது. இந்த தேர்தலும் இரு மாநிலமாக கருதி நடத்தப்பட்டது. இதில் தெலங்கானாவில் உள்ள 119 சட்ட மன்ற தொகுதிகளில் டிஆர்எஸ் 63 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. 

காங்கிரஸ் 21 இடங்களை யும், தெலுங்கு தேசம் 20 இடங்களையும் பிடித்தது. மேலும் இங்குள்ள 17 மக்களவை தொகுதிகளில் 11 இடங்களை டிஆர்எஸ் கைப்பற்றியது. இதையடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நாட்டின் 29வது புதிய மாநிலமாக தெலங்கானா நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக உதயமானது.

 அடிலாபாத், ஐதராபாத், கரீம்நகர், கம்மம், மெகபூப்நகர், மேடக், நல்கொண்டா, நிஜாமாபாத், ரெங்காரெட்டி, வாரங்கல் என 10 மாவட்டங்கள் இந்த மாநிலத்தில் இடம்பெறுகின்றன. தெலங்கானாவின் முதல் முதல்வராக டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகரராவ் இன்று காலை 8 மணிக்கு பதவி ஏற்கிறார். ஐதராபாத்தில் உள்ள கவர்னர் மாளிகை ராஜ் பவனில் நடைபெறும் விழாவில் கவர்னர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

அவருடன் 15 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். பின்னர், போலீஸ் பயிற்சி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் போலீசார் அணிவகுப்பை சந்திரசேகர ராவ் ஏற்கிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் பொதுகூட்டத்தில் பேசுகிறார். விழாவை முன்னிட்டு ஐதராபாத் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தெலங்கானாவில் புதிய அரசு பொறுப்பேற்பதால், அங்கு அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி இன்று முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது. சீமாந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்கும் வரை, ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும்.

இரவு முழுவதும் கொண்டாட்டம்

புதிய தெலங்கானா மாநிலம் உருவாகுவதையொட்டி நேற்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 11.59 வரை தெலங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களிலும் டிஆர்எஸ் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு புதிய மாநிலம் உருவானதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். சில அமைப்புகள் தெலங்கானா உருவான நிகழ்ச்சிகள் ஒரு வாரம் நடத்தி வருகின்றனர். 

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஐதராபாத்தில் உள்ள என்டிஆர் பவனிலும் தெலங்கானா உருவான நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதில் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திரா மாநில முதல்வராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு கலந்துகொள்கிறார். காங்கிரஸ் கட்சி தலைவர் தெலங்கானா மாநில தலைவர் பென்னால லட்சுமய்யா தலைமையில் கட்சி அலுவலகமான காந்தி பவனில் கொண்டாடுகின்றனர். மேலும் மாநிலத்தில் உள்ள 10 மாவட்ட கலெக்டர், எஸ்பி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தெலங்கானா மாநிலம் தொடக்கம் கொண்டாடப்படுகிறது. 


44 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒதுக்கீடு
புதிதாக உருவாகும் தெலங்கானா மாநிலத்துக்கு 44 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தற்காலிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது. தெலங்கானாவுக்கு 163 ஐ.ஏ.எஸ், 112 ஐ.பி.எஸ், 65 ஐ.எப்.எஸ்(வனத்துறை) அதிகாரிகளை நியமிக்க மத்திய விஜிலென்ஸ் ஆணையர் பிரதியுஸ் சின்கா தலைமையிலான மத்தியக் குழு பரிந்துரை செய்துள்ளது. இதை மத்திய பணியாளர் துறை ஏற்றபின் இறுதி ஒதுக்கீடு செய்யப்படும்.