எந்திரன் - 2 பட்ஜெட் ரகசியம்

‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்தயாரிப்பு வேலைகள் தொடங்கும் முன்பே ரஜினியை இயக்குநர் ஷங்கர் சந்தித்துப் பேசி எந்திரன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. இருவரும் இணைந்த இரண்டாவது படமான ‘எந்திரன்’ சுமார் 130 கோடி ரூபாய் செலவில் தயாராகி 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் சொல்கின்றன.

கடந்த சில வருடங்களாக மாஸ் ஹீரோ படங்களின் பட்ஜெட்டுகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எந்திரன் இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் மட்டுமே 200 கோடி என்று திட்டமிட்டுவருகிறார்களாம். இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தப் பட்ஜெட்டுக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.

ஆனால் விநியோகத்தில் பெரிய மாற்றம். எந்திரன் முதல் பாகம் போல அல்லாமல், ‘கோச்சடையான்’ படத்தைப் போல, பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிட்டால் 100 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டலாம் என்றும் கணக்குப் போடுகிறார்களாம். ஆக இந்திய சினிமாவில் முதன் முறையாக 200 கோடி ரூபாயில் தயாராகப் போகும் படமாக எந்திரன் இரண்டாம் பாகம் இருக்குமா?