4 வயது மகனுடன் ஆசிரியை ஏரியில் குதித்து தற்கொலை

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே 4 வயது மகனுடன் ஆசிரியை ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன்பு ஆசிரியை எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ளது ஊசுட்டேரி படகுக் குழாம். இங்கு நேற்று காலை முதலே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். 

 

பகல் 3 மணி அளவில் ஒரு படகில் சுற்றுலா பயணிகள் சென்றபோது ஏரியின் ஆழமான பகுதியில் ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவனின்உடல்கள் மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக இது குறித்து வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வில்லியனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

ஏரியில் மிதந்த உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பிணமாக மிதந்தவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டறிய அந்த பகுதியைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் அவர்களைப்பற்றிய விவரம் அந்த பகுதியில் உள்ள யாருக்கும் தெரியவில்லை.

அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும்

அதைத் தொடர்ந்து புதுவையில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்து ஒரு பெண் மற்றும் சிறுவன் காணாமல்போனதாக புகார் வந்து உள்ளதா? என விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் பலன் கிடைத்தது. புதுவை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் இருந்து காணாமல்போனதாக புகார் வந்துள்ள தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து புகார் கூறியவர் களை தொடர்பு கொண்டு, அவர்களை ஊசுட்டேரிக்கு உடனடியாக வரவழைத்தனர்.

அரசு பள்ளி ஆசிரியை

அவர்கள் வந்து பார்த்ததில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் சங்கீதா (வயது 27), புதுவை வ.உ.சி. நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மனைவி என்பது தெரிய வந்தது. அவர் மடுகரையில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பிணமாக மிதந்த சிறுவன் சங்கீதாவின் மகன் அமுதேஸ்வரன் (4). சங்கீதா தனது மகனுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் சங்கீதாவின் உடலை சோதனை செய்தபோது அவர், பாலிதீன் கவரில் சுற்றிய நிலையில் ஒரு மணிபர்ஸ் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த மணிபர்சில் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் “என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் அல்ல, என்னுடைய மகன் அமுதேஸ்வரனை அனாதையாக விட்டுச்செல்ல விருப்பம் இல்லை, என்னை மன்னித்துவிடுங்கள்” என்று உருக்கமான முறையில் எழுதப்பட்டு இருந்தது.

4 மாத கர்ப்பிணி

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சங்கீதா 4 மாத கர்ப்பிணியாக இருந்ததும் தெரிய வந்தது. ஆசிரியையும், அவருடைய 4 வயது மகனும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை ஏன் தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.