சிலிண்டர் மாதம் ரூ.5 உயரும்: கெரசின் விலையும் அதிகரிக்கிறது

மானிய குறைப்பால் சமை யல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு மாதம் ரூ.5ம், கெரசினுக்கு லிட்டருக்கு 50 காசுகள் முதல் ஒரு ரூபாயும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

 இதன்படி, டீசல் விலை மாதம்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தப்படுகிறது. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நிதி ஆதாரங்களை விரிவு படுத்துவதும், அரசு வருவாயை அதிகரிப்பதையும் முக்கிய நோக்கமாக மத்திய அரசு கொண்டுள்ளதாக தெரிகிறது. ரயில்வே துறைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதம், சரக்கு கட்டணம் 6.5 சதவீதம் அதிகரித்து மத்திய அரசு சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது.

பின்னர், சர்க்கரை உற்பத்தி உபரியாக உள்ளதால் விலை சரிவை தடுக்க இறக்குமதி வரியை உயர்த்தவும், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.4,400 கோடி வட்டியில்லா கடன் வழங்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இறக்குமதி வரி விதிப்பு காரணமாக சர்க்கரை விலையும் சில்லரை மற்றும் மொத்த விற்பனை சந்தையில் 2 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமையல் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ.5 உயர்த்தவும், கெரசினுக்கு லிட்டருக்கு மாதம் 50 காசுகள் முதல் ரூ.1 வரை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இந்த 2 எரிபொருளுக்கும் வழங்கப்படும் ரூ.80 ஆயிரம் கோடி மானிய சுமையில் இருந்து மத்திய அரசு படிப்படியாக தப்பிக்க வழி செய்கிறது. 

டீசல், சமையல் எரிவாயு, கெரசின் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து மத்திய அரசு தற்போது ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்து 548 கோடி மானியம் வழங்குகிறது. இதில், சமையல் எரிவாயுவுக்கு ரூ.50,324 கோடியும், கெரசினுக்கு ரூ.29,488 கோடியும் மானியமாக செல்கிறது. எனவே, டீசலை போலவே சமையல் எரிவாயு சிலிண்டர், கெரசின் விலையை மாதந்தோறும் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டருக்கு மானியமாக ரூ.432.71 வழங்கப்பட்டு வருகிறது.

இதன் விலையை மாதம் ரூ.5 உயர்த்துவதன் மூலம், 7 ஆண்டுகளில் மானிய சுமை குறை யும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், கெரசினுக்கு லிட்டருக்கு ரூ.32.87 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு மாதம் ஒரு ரூபாய் உயர்த்தப்படுவதன் மூலம், இரண்டரை ஆண்டுகளில் மானியச்சுமை குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.