தமிழகம் முழுவதும் 7.63 லட்சம் பேர் விஏஓ தேர்வு எழுதினர்

கிராம நிர்வாக அதிகாரி தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 588 பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) மூலம், பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வபோது நிரப்பப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அதிகாரி(விஏஓ) பணியிடங்களை நிரப்ப, கடந்த மார்ச் 17ம் தேதி அறிவிப்பு வெளியானது. இதற்காக, தமிழகம் முழுவதும் 243 தேர்வு மையங்களில், 3628 தேர்வுக் கூடங்களில் தேர்வு நடந்தது. விஏஓவு தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இருப்பினும், நேற்று நடைபெற்ற விஏஓ தேர்வில் அதிகளவிலான பொறியியல் மற்றும் முதுகலை பட்டதாரிகள் கலந்து கொண்டனர். 


பல்வேறு மையங்களில் பெண்கள், தங்களின் குழந்தைகளுடன் தேர்வெழுத வந்திருந்தனர். மொத்தம், 10 லட்சத்து 8,662 பேர் விஏஓ போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மொத்தம் 7 லட்சத்து 63 ஆயிரத்து 588 பேர் தேர்வு எழுதினர். 2 லட்சத்து 46 ஆயிரத்து 250 பேர் தேர்வெழுத வரவில்லை. மொத்தம் 75 சதவீதம் பேர் தேர்வு எழுதி யுள்ளனர். சென்னையில் மட்டும் விஏஓ தேர்வை 46 ஆயிரம் பேர் எழுதினர். வழக்கமாக இதுபோன்ற தேர்வுகள் ஞாயிற்றுக் கிழமையில்தான் நடைபெறும். ஆனால், இந்த முறை சனிக்கிழமை நடத்தப்பட்டதால் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 

திருவல்லிக்கேணியில் உள்ள வெலிங்டன் சீமாட்டி மேல்நிலைப்பள்ளியின் ஒரு அறையில் கேள்வித்தாள் மாற்றி வழங்கப்பட்டன. தமிழில் தேர்வு எழுதுவோருக்கு ஆங்கிலத்தில் கேள்வித்தாள் வழங்கப்பட்டது. இதனால் அங்கு சற்று தாமதமாக தேர்வு துவங்கியது. தேர்வர்களின் வசதிக்காக போக்குவரத்துக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அனைத்து தேர்வுக் கூடங்களிலும் வீடியோ எடுக்கப்பட்டது. 

தேர்வு மையங்களை ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் அனைத்து தேர்வு மையங்களிலும் திடீர் விசிட் அடித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சில தேர்வு மையங்களில் வெப்கேமரா பொருத்தப்பட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய அலுவலகத்தில் இருந்தே இணைய தளம் மூலம் கண்காணிக்கப்பட்டது. தமிழ் பாடத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாகவும், மீதி கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

விஏஓ குறித்து 25 கேள்விகள் 

விஏஓ தேர்வு வரலாற்றில், முதன்முறையாக இந்தமுறை 25 கேள்விகள் கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றி கேட்கப்பட்டது. விஏஓக்களின் பணிகள் என்ன? அவர்களின் அதிகாரம் என்ன? முதன்முதலில் எழுத்து தேர்வு மூலம் எந்த ஆண்டு கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் போன்ற கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன. மேலும், தற்போதைய நிகழ்வுகளும் அதிகளவில் கேட்கப்பட்டன. உதாரணமாக சமீபத்தில் காணாமல் போன மலேசியா விமானம் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டது.