8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பேஸ்புக்கில் வீடியோவைப் போட்டு அட்டூழியம்

உ.பி. மாநிலம் முசாபர் நகரில் 20 வயது பெண்ணை எட்டு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவில் படமாக்கி, பேஸ்புக்கிலும் போட்டு அட்டூழியம் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலாத்காரம் செய்த கும்பலில் அந்தப் பெண்ணின் நண்பன் ஒருவனும் இருந்துள்ளான். அவன்தான் இந்த அக்கிரமச் செயலை வீடியோப் படமாக்கியுள்ளான். 

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்துள்ளது. இதுகுறித்து தற்போது அப்பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், தனது நண்பனுடன் மதிய உணவு சாப்பிடுவதற்காக போயிருந்ததாகவும், அப்போது பஸ்தாடா என்ற கிராமத்தில் நான்கு பேர் தங்களை வழிமறித்தனர். பின்னர் தனியான இடத்திற்குக் கொண்டு சென்ற அக்கும்பல் அங்கு ஏற்கனவே காத்திருந்த 3 பேருடன் சேர்ந்து தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் கூறியுள்ளார். 

ஐந்து பேர் முதலில் பலாத்காரம் செய்ததாகவும், அதை மற்ற 3 பேரும் கேமராவில் படமாக்கியதாகவும், பின்னர் அந்த 3 பேரும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அப்பெண் கூறியுள்ளார். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அக்கும்பல் மிரட்டியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண் போலீஸை நாடவில்லை. ஆனால் தன்னைப் பலாத்காரம் செய்த காட்சியை அக்கும்பல் பேஸ்புக்கில் போட்டதை அறிந்து அதிர்ச்சியுற்ற அவர் தற்போது போலீஸில் கூறியுள்ளார்.

 தற்போது போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷீத், வாசிக், அப்துல் ரஹ்மான், ஷோகன், அபுல், மோனு, ராகுல், சலாவு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், ரஷீத், வாசிக், அப்துல் ரஹ்மான், ஷோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைப் பிடிக்க நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.