91 பந்துகளில் 295 ரன்கள்: அயர்லாந்தில் ராய் சில்வா சாதனை

அயர்லாந்து உள்நாட்டு அணிக்கு விளையாடிய இலங்கையைச் சேர்ந்த ராய் சில்வா 40 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 91 பந்துகளில் 295 ரன்கள் விளாசியுள்ளார்.ராய் சில்வா, இவருக்கு வயது 34. கடந்த ஆண்டு வரை இவர் கொழும்பு கிரிக்கெட் கிளப் அணிக்கு விளையாடியவர். இவர்தான் 40 ஓவர் போட்டி ஒன்றில் 91 பந்துகளில் 295 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

அயர்லாந்து உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ஓ’நீல்ஸ் அல்ஸ்டர் ஷீல்ட் தொடரில் கிளெண்டர்மாட் அணிக்கு ராய் சில்வா விளையாடினார்.

கிளிஃப்டன்வில் அணிக்கு எதிராக இவர் ஆடிய இந்த ஆட்டத்தில்தான் 91 பந்துகளில் 295 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 11 பவுண்டரிகள், 34 சிக்சர்கள் அடங்கும். அதாவது 248 ரன்களை இவர் பவுண்டரி வாயிலாக எடுத்துள்ளார்.

இவரது அணியான கிளெண்டர்மாட் 40 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 462 ரன்கள் எடுத்தது. சதத்தை 27 பந்துகளில் எடுத்த இவர் அடுத்த 64 பந்துகளில் 195 ரன்களை விளாசியுள்ளார்.

இவர் 13 ஆண்டுகளாக முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது