அதிதி:திரை விமர்சனம்

மூன்று பெரியவர்கள், ஒரு குழந்தை, ஒரு துப்பாக்கி, ஒரு கார், ஒரு முழு நாள். இவற்றை வைத்துக்கொண்டு த்ரில்லராகத் தொடங்கி உணர்ச்சிகரமான கதையாக முடியும் படம்தான் பரதனின் இயக்கத்தில் வந்திருக்கும் அதிதி.

ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் (நந்தா) மனைவி (அனன்யா), குழந்தையுடன் மகிழ்ச்சியான இல்லறத்தை நடத்திக் கொண்டிருக்கிறான். அலுவலகத்தில் ஏற்படும் எந்த நெருக்கடியையும் தன் சாதுரியத்தால் தீர்த்துவைத்துத் தொழிலில் வேகமாக முன்னேறுகிறான். திடீரென்று ஒரு நாள் யாரோ ஒரு இளைஞன் (நிகேஷ் ராம்) இவர்கள் குழந்தையைக் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்ட ஆரம்பிக்கிறான். இவர்களுடைய பணம், தொழில் என எல்லாவற்றையும் காலிசெய்கிறான். தெருத்தெருவாக அலையவைக்கிறான். குழந்தையைக் காப்பாற்றுவதற்காக அவன் சொல்வதையெல்லாம் செய்கிறார் கள். நாள் முழுவதும் கேவலமாக அலைக் கழிக்கப்படுகிறார்கள். குழந்தையை மீட்க முடிந்ததா, இவர்களை ஏன் அவன் அலைக்கழித்தான் என்பதை கனமான ஒரு செய்தியுடன் சொல்கிறது அதிதி.

மலையாளத்தில் வெளியான ‘காக் டெய்ல்’ படத்தின் மறுஆக்கமான இது கடத்தல், மிரட்டல் எனப் பரபரப்பாகப் பயணித்துக் கடைசியில் மனதைக் கனக்கவைத்துவிடுகிறது.

கடத்தல் கதைதான் என்றாலும், சண்டைக் காட்சிகள், ரத்தம் சிந்தும் காட்சிகள் என எதுவுமே இல்லாமல் பரபரப்பான திரைக்கதையை அமைத்த இயக்குநர் பரதனைப் பாராட்ட வேண்டும். கடத்தலுக்கான காரணம் எதிர்பாராத ஒரு கோணத்தை வெளிப்படுத்துகிறது. அதுவரையில் திரைக்கதையில் தெரிந்த ஓட்டைகளையும் இது அடைத்துவிடு கிறது. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கிறது. புதிதாக வரும் வேலைக் காரப் பெண்ணிடம் குழந்தையை விட்டுவிட்டு ஒரு அம்மா வருவாளா என்னும் கேள்வி அதில் ஒன்று.

கடத்தல், மிரட்டல் ஆகியவற்றுக்கு நடுவில் சில வசனங்கள் பளீரிடுகின்றன. ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவனிடம் குடிசைப் பகுதியைக் காட்டி, “இந்த இடத்தை எல்லாம் பாத்துருக்கியா? நீ எங்க பார்த்திருக்கப் போற? இதையெல்லாம் காலி பண்ணி உனக்கு பில்டிங் கட்டத் தான் தெரியும்” என்பது அதில் ஒன்று.

இளம் அப்பா வேடத்துக்குக் கச்சித மாக பொருந்தியிருக்கிறார் நந்தா. பணிக் களத்தில் கூர்மை, குழந்தையிடம் நெகிழ்ச்சி, மனைவியிடம் அன்பு, குழந்தை கடத்தப்பட்டிருக்கும்போது ஏற்படும் பதற்றம், தவறு அம்பலமாகும் போது குற்ற உணர்வு என எல்லா விதமான உணர்ச்சிகளையும் நம்பகத் தன்மையோடு சித்தரித்திருக்கிறார்.

அனன்யாவுக்கும் தன் நடிப்புத் திறமையைக் காட்ட நல்ல வாய்ப்பு. காதல், பாசம், அச்சம், கோபம், மருட்சி, வெறுப்பு, மன்னிப்பு ஆகியவை கலந்த பாத்திரத்தை நன்றாகக் கையாண்டுள் ளார்.

வில்லனைப் போல வந்து கடைசியில் வேறு முகம் காட்டும் பாத்திரத்தில் நிகேஷ் ராம் கவனத்தைக் கவர்கிறார்.

பரபரப்பான திரைக்கதையில் கொஞ்சம் சிரிக்கவும் வைக்க வேண்டும் என்று தம்பி ராமையாவின் காமெடி காட்சிகளை சேர்ந்திருக்கிறார்கள். படத்தின் வேகத்தைக் குறைக்கவே அது பெரும்பாலும் பயன்பட்டிருக்கிறது. ரச்சனா மவுரியாவின் குத்தாட்டப் பாடலும் படத்தின் ஓட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

பரத்வாஜின் பாடல்களில் சிறப்பாகச் சொல்ல எதுவுமில்லை. படத்திற்கு என்ன தேவையோ அதை எல்லை மீறாமல் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய்.

படம் சமகாலப் பிரச்சினை ஒன்றை அழுத்தமாகக் கையாள்கிறது. நவீன வாழ்க்கை தரும் புதிய வாய்ப்புகளின் தவிர்க்க இயலாத பின்விளைவுகளில் ஒன்றைப் பற்றிப் பேசுகிறது. அதிதி என்றால் விருந்தினர் எனப் பொருள். விருந்தினர்களை தெய்வமாகக் கருத வேண்டும் என்கிறது இந்திய மரபு. அத்தகைய விருந்தினர்கள் குடும்பத்துக்கு விஷமாக மாற முடியுமா? விருந்தினர் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காமல் அத்துமீறினால் என்ன நடக்கும்? அதன் விளைவுகள் மனிதர்களையும் மனித உறவுகளையும் குடும்பங்களையும் எந்த அளவு பாதிக்கும்? இத்தகைய கேள்விகளை வலுவாக எழுப்புகிறது இந்தப் படம்.

த்ரில்லராகத் தொடங்கிச் சமூக உறவுகள் குறித்த படமாக உருமாறும் இந்த அதிதியைக் குறைகளைப் பொருட்படுத்தாமல் வரவேற்கலாம்.