கிங்ஸ் லெவன் - நைட் ரைடர்ஸ் பெங்களூரில் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசனில் சாம்பியன் பட்டம் பெறப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் பைனலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி, பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. 
                                     


கடந்த ஒன்றரை மாதமாக கிரிக்கெட் ரசிகர்களை ஆட்டிப்படைத்த ஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை லீக் ஆட்டங்களில் மோதிய நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த பஞ்சாப், கொல்கத்தா, சென்னை, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. குவாலிபயர் 1 ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 அடுத்து நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி, குவாலிபயர் 2 ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. இதில் பஞ்சாப் - சென்னை அணிகள் நேற்று முன்தினம் இரவு மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது.

 தொடக்க வீரர் வீரேந்திர சேவக் 58 பந்தில் 122 ரன் விளாசி (12 பவுண்டரி, 8 சிக்சர்) அசத்தினார். வோரா 34, மில்லர் 38 ரன் எடுத்தனர். இதைத் தொடர்ந்து 227 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க வீரர்கள் டுபிளெஸ்சிஸ் (0), ஸ்மித் (7) இருவரும் ஏமாற்றமளித்தனர். 

இந்த பின்னடைவால் கொஞ்சமும் கலங்காத சுரேஷ் ரெய்னா பஞ்சாப் பந்துவீச்சை சிதறடிக்க, சென்னை அணி 6வது ஓவரிலேயே 100 ரன்னை எட்டி மிரட்டியது. ஐபிஎல் வரலாற்றில், பவர் பிளே ஓவர்களில் எடுக்கப்பட்ட மிக அதிக ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் 16 பந்தில் அரை சதம் அடித்த ரெய்னா சதத்தை நெருங்கிய நிலையில், பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லியின் துடிப்பான பீல்டிங்கில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 

ரெய்னா 25 பந்தில் 87 ரன் விளாசியது (12 பவுண்டரி, 6 சிக்சர்) குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த அதிரடி ஆட்டத்தால் கிடைத்த சாதகமான நிலையை அடுத்து வந்த சிஎஸ்கே வீரர்கள் வீணடித்தனர். சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்து 24 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கேப்டன் டோனி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினாலும், வெற்றி இலக்கை நெருங்க முடியாமல் ஏமாற்றமடைந்தார். டோனி 42 ரன் எடுத்து (31 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். 

அவர் பேட்டிங் வரிசையில் முன்னதாக களமிறங்கி இருந்தால், 6வது முறையாக பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்திருக்கலாம் என்று சென்னை ரசிகர்களை அங்கலாய்க்க வைத்துவிட்டார். 

பஞ்சாப் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், கொல்கத்தா அணி 2வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. சேவக், வோரா, மேக்ஸ்வெல், மில்லர், பெய்லி, சாஹா என்று அணிவகுக்கும் அதிரடி பேட்ஸ்மேன்களை சுனில் நரைன், சாவ்லா சுழலும், மார்னி மார்கெல், உமேஷ் யாதவ், ஷாகிப் ஹசன் வேகக் கூட்டணியும் கட்டுப்படுத்துமா என்பதைப் பொறுத்தே ஆட்டத்தின் முடிவு அமையும். 


கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டங்களில் மேக்ஸ்வெல்லின் அதிரடி இதுவரை எடுபடவில்லை என்பது கம்பீருக்கு ஆறுதல் அளிக்கும் புள்ளி விவரம். ஐபிஎல் 7வது சீசனில் யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரன் குவிப்பின் முன்னிலை வகிக்கும் ராபின் உத்தப்பா, கம்பீர், யூசுப் பதான், ஷாகிப், டென்டஸ்சேட் என்று கொல்கத்தா அணியிலும் அதிரடிக்கு பஞ்சமில்லை என்பதால், பெங்களூரில் இன்று இரவு வாணவேடிக்கை நிச்சயம். இரு அணிகளுமே கோப்பையுடன் ரூ.15 கோடி முதல் பரிசை தட்டிச் செல்லும் உத்வேகத்துடன் உள்ளதால், கடைசி பந்து வரை ஆட்டத்தி அனல் பறக்கும் என நம்பலாம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), வீரேந்திர சேவக், அனுரீத் சிங், பர்விந்தர் அவானா, லஷ்மிபதி பாலாஜி, ரிஷி தவான், குர்கீரத் சிங் மான், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், மிட்செல் ஜான்சன், கரண்வீர் சிங், முரளி கார்த்திக், மன்தீப் சிங், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், அக்ஷர் பட்டேல், திசாரா பெரேரா, செதேஷ்வர் புஜாரா, விருத்திமான் சாஹா, சந்தீப் ஷர்மா, ஷிவம் ஷர்மா, ஷர்துல் தாகுர், மனன் வோரா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கவுதம் கம்பீர் (கேப்டன்), மன்விந்தர் பிஸ்லா, பியுஷ் சாவ்லா, பேட் கம்மின்ஸ், தேவபிரதா தாஸ், ஜாக் காலிஸ், குல்தீப் யாதவ், கிறிஸ் லின், சயான் மொண்டால், மார்னி மார்கெல், சுனில் நரைன், மணிஷ் பாண்டே, யூசுப் பதான், வீர் பிரதாப் சிங், ஆந்த்ரே ரஸ்ஸல், ஷாகிப் அல் ஹசன், ரியான் டென் டஸ்சேட், ராபின் உத்தப்பா, வினய் குமார், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ்.