மூன்று முக்கிய பதவிகள் குறித்து பா.ஜ., மேலிடம் ஆலோசனை

பார்லிமென்டின் மூன்று முக்கிய பதவிகளுக்கு, யார் யாரை தேர்வு செய்யலாம் என்பன குறித்த பலத்த ஆலோசனையில், பா.ஜ., மூழ்கி உள்ளது. அதேநேரத்தில், இந்த பதவிக்கான நியமனங்கள் மூலம், எதிர்கால அரசியலின், லாப, நஷ்ட கணக்குகளையும், பா.ஜ., தலைவர்கள் போடத் துவங்கி உள்ளனர்.

இம்மாதம் 4ல் கூடிய பார்லிமென்ட், புதிய எம்பி.,க்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு, ஜனாதிபதி உரை என, மூன்று முக்கிய நிகழ்வுகளுடன், கடந்த புதனன்று முடிந்து விட்டது.புதிய அரசு பதவியேற்ற பின் துவங்கிய முதல் கூட்டத்தொடர், குறுகிய கால கூட்டத்தொடராக முடிந்து விட்டாலும், அடுத்ததாக, மூன்று முக்கிய விஷயங்களை இறுதி செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது.


எதிர்கட்சி தலைவர்

லோக்சபாவை பொறுத்தவரை, துணை சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பொதுக்கணக்கு குழு தலைவர் பதவிகள் முக்கியமானவை. பெரும்பாலும், இந்த மூன்று பதவிகளிலும், பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களே அமர்த்தப்படுவது வழக்கம்.இம்முறை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறும் அளவுக்கு, மொத்த எம்.பி.,க்களில், 10 சதவீதம் காங்கிரசுக்கு இல்லை. அதனால், இந்த மூன்று பதவி விஷயத்தில், உடனடியாக முடிவெடுக்க முடியாத நிலையில், ஆளும்கட்சி தரப்பு உள்ளது. 

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான பார்லிமென்ட் விதிகள் மற்றும் முந்தைய சபாநாயகர்கள் எடுத்த முன் மாதிரி முடிவுகள் எல்லாம் தெளிவாக இல்லை.எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது, அரசின் முக்கிய முடிவுகளில், மிகப்பெரிய பங்கு வகிக்கக் கூடியது. அரசியல் சட்ட அமைப்புகளான, 'லோக்பால்' மற்றும் மத்திய லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம் போன்றவற்றுக்கான தலைவர்கள் நியமனங்களின் போது, அவற்றுக்கான, தேர்வுக் குழுவில், எதிர்க்கட்சித் தலைவரும், ஒரு உறுப்பினராக இடம் பெற வேண்டும்.

 அதனால், எப்படியும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில், ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஒருவேளை, எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கா விட்டால், அந்தப் பதவி காலியாக உள்ளது எனக் கூறி, பிரதமர், சபாநாயகர் உட்பட குழுவில் உள்ள பிற உறுப்பினர்களே, நியமனங்களை இறுதி செய்யும் நிலைமை உருவாகும்.

புரியாத புதிர்


இந்தப் பிரச்னையால், 'லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, காங்கிரசுக்கு அளிக்கலாம்' என, ஒரு பிரிவினரும், 'அளித்தே ஆக வேண்டுமென்ற அவசியம் இல்லை' என, மற்றொரு தரப்பினரும், பா.ஜ., கட்சிக்கு உள்ளேயே விவாதித்து வருகின்றனர்.இருப்பினும், உயரிய அரசியல் சட்ட அமைப்பு களுக்கு, எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவம் இல்லாமல் நியமனங்களை மேற்கொண்டால், அது பலத்த விமர்சனங்களுக்கு ஆளாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே, இவ்விஷயத்தில், பா.ஜ., என்ன முடிவெடுக்கும் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது. 

அடுத்ததாக, பொதுக்கணக்கு குழு தலைவர் பதவி. அரசின் வரவு - செலவு கணக்குகளை குடையும் அதிகாரம் மிக்க பதவி. அரசில் பங்கேற்காத, மிகப்பெரிய எதிர்க்கட்சிக்கே இந்தப் பதவி வழங்கப்படும். அதன்படி பார்த்தால், 44 எம்.பி.,க்களை உடைய தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு இந்தப் பதவி தானாகவே கிடைத்து விடும். லோக்சபா துணை சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில், மிகப்பெரிய, 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது. இது, ஒன்றும் பலம் பொருத்திய பதவி இல்லை என்றாலும், இந்த பதவி மூலம், எதிர்கால அரசியல் லாப, நஷ்ட கணக்குகளை போட்டு வருகிறது, பா.ஜ., மேலிடம். அதற்கேற்ற வகையில், காய் நகர்த்த திட்டமிட்டுள்ளது. எது எப்படியோ, அடுத்த மாதம், இரண்டாவது வாரத்தில் துவங்கும், பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடருக்குள், இந்த மூன்று பதவிகள் குறித்தும், முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில், பா.ஜ., உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரு தரப்பும் தீவிர யோசனை

லோக்சபாவில், மூன்றாவது பெரிய கட்சியான, அ.தி.மு.க.,வுக்கு, அதுவும் அந்தக் கட்சியைச் சேர்ந்த தம்பித்துரைக்கே, லோக்சபா துணை சபாநாயகர் பதவி என, செய்திகள் வெளியானாலும், இது குறித்தும், பா.ஜ., தரப்பில், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.துணை சபாநாயகர் பதவியை அளித்து, அ.தி.மு.க.,வை, நிரந்தர ஆதரவு கட்சியாக ஆக்க முடியுமா என, பா.ஜ.,வும், இந்த பதவிக்காக, 37 எம்பி.,க்கள் ஆதரவையும், ஒரேயடியாக தூக்கி கொடுத்து விடுவதா என, அ.திமு.க.,வும் யோசித்து வருகின்றன. துணை சபாநாயகர் பதவி, வெறும் கவுரவம் உடைய பதவி மட்டுமே. இதனால், பதவியை பெறும் நபர் வேண்டுமானால் பலன் அடையலாம். 


கட்சிக்கோ அல்லது மாநிலத்துக்கோ பெரிதாக பலன் இருக்காது.எனவே, பா.ஜ., - அ.தி.மு.க., இடையே, வேறு ஏதாவது கூடுதல் ஒப்பந்தங்கள் ஏற்பட்டால் அன்றி, துணை சபாநாயகர் பதவியில், தம்பித்துரை அமர்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.ஆனாலும், லோக்சபாவில் தம்பித்துரையும், ராஜ்யசபாவில் மைத்ரேயனும், ஜனாதிபதி உரையை, வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளதால், பா.ஜ., - அ.தி.மு.க., இடையே, துணை சபாநாயகர் பதவி உட்பட, சில முக்கிய விஷயங்களில், சுமுக பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப் பதாகவே தெரிகிறது.தெலுங்கு தேசத்திற்கு இல்லை


*முந்தைய லோக்சபாவில், பா.ஜ.,வுக்கு, 116 எம்.பி.,க்கள் இருந்தனர்.
*இது, லோக்சபா எம்.பி.,க்களின் மொத்த எண்ணிக்கையில், 10 சதவீதத்திற்கும் அதிகம் என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, பா.ஜ.,வுக்கு வழங்கப்பட்டது. தற்போதைய, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.
*முந்தைய அரசில், பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, பொதுக்கணக்கு குழு தலைவராக செயல்பட்டார்.
*பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கரியா முண்டா, துணை சபாநாயகராக பதவி வகித்தார்.
*கடந்த 1984ல், நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, 414 இடங்களைப் பிடித்தது. அப்போது, எதிர்க்கட்சிகளில், 30 இடங்களைப் பிடித்து, தனிப்பெரும் கட்சியாக இருந்த, தெலுங்கு தேசத்திற்கு, எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படவில்லை.
*லோக்சபாவில், 1969 வரை, அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லை. அதேபோல், 1980 முதல் 1989ம் ஆண்டு வரையும், இந்தப் பதவி காலியாகவே இருந்தது.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து, பார்லிமென்டின் அடுத்த கூட்டத்தொடருக்குள் முடிவு செய்யப்படும். அதற்கு முன், அரசியல் சட்ட நிபுணர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் அனுபவம் மிக்க நபர்களிடம் ஆலோசனை நடத்துவேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது பற்றி எல்லாம், இப்போதைக்கு எதையும் தெரிவிக்க இயலாது.
சுமித்ரா மகாஜன்,லோக்சபா சபாநாயகர்

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற, ஒரு அரசியல் கட்சி, இவ்வளவு இடங்களைப் பெற்றிருக்க வேண்டும் என, எந்த சட்ட விதிகளும் இல்லை. எதிர்க்கட்சி தலைவரை நியமிக்காமல், ஆளும் கட்சி புறக்கணிப்பது, ஜனநாயக விரோதமானது. லோக்பால் தலைவர் நியமனம் உட்பட, பல முக்கிய பதவிகளுக்கான நியமனங்களில், எதிர்க்கட்சித் தலைவரின் பங்களிப்பு அவசியம்.