சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதா சாமி தரிசனம்

நடிகை ரஞ்சிதா, நித்யானந்தா சாமியாருடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த காட்சிகளை பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்பினரும் அவருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது நித்யானந்தா சாமியாரின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டன. கர்நாடக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதற்கிடையே, தனக்கும் நித்யானந்தா சாமியாருக்கும் இடையே குரு–பக்தை உறவு மட்டுமே இருப்பதாகவும், சிலர் தேவையில்லாமல் அவதூறு பரப்பி வருவதாகவும் நடிகை ரஞ்சிதா கூறினார். கடந்த டிசம்பர் மாதம் நித்யானந்தா சாமியாரின் பிறந்தநாளில் அவரிடம் முறைப்படி தீட்சிதை பெற்று நடிகை ரஞ்சிதா சன்னியாசியானார்.

திருப்பதியில் தரிசனம் 

இந்தநிலையில் நித்யானந்தா சாமியார், ரஞ்சிதா உள்பட சீடர்கள் பலர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திருமலைக்கு வந்தனர். நித்யானந்தா சாமியார் தன்னுடைய கழுத்தில் பெரிய அளவில் தங்க ஆபரண மாலை ஒன்றை அணிந்திருந்தார். ரஞ்சிதா தனது கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருந்தார். இருவரும் தங்களுடைய நெற்றியில் விபூதி பூசியிருந்தனர்.

கோவிலுக்குள் சென்ற அவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவிலில் லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கப்பட்டன. தங்க கொடிமரத்தை வலம் வந்து வணங்கி அவர்கள் இருவரும் கோவிலில் இருந்து வெளியே வந்தனர். வரும்போது நித்யானந்தா சாமியார் சிரித்த முகத்துடன் காணப்பட்டார். பக்தர்கள் அவரிடம் ஆசி வாங்க முயன்றனர். அவரை சிலர் கண்டு கொள்ளவில்லை. அவர் வேக வேகமாக நடந்து சென்றார்.