பாண்டே தாண்டவத்தால் கொல்கத்தா சாம்பியன்

கிங்ஸ் 11 பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது. இதன் மூலம் 3 வருடங்களில் இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வென்றுள்ளது.
       
                                       

முதலில் ஆடிய பஞ்சாப் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணியின் சாஹா சதமடித்தார். இலக்கை விரட்டிய கொல்கத்தா அணிக்கு பாண்டே 50 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட, நரைன் 1 ரன்னும், சாவ்லா வெற்றி ரன்களாக பவுண்டரியை அடித்தும் அணியை வெற்றி பெறச் செய்தனர்.

சற்றே பெரிய இலக்கை விரட்ட களமிறங்கிய உத்தப்பா முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து ஆட வந்த காம்பீர், பாண்டேவுடன் இணைந்து இலக்கை நோக்கி அணியை வழிநடத்த முயற்சித்தார். 23 ரன்கள் எடுத்திருந்த போது காம்பீர், கரன்வீர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து யூசுப் பதான் இலக்கை விரட்டும் முயற்சியில் இணைந்தார். மறுமுனையில் இருந்த பாண்டே விக்கெட்டுகள் விழுந்ததைப் பற்றிக் கவலைப்படாமல், பஞ்சாபின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டார். குறிப்பாக அவானா வீசிய 11-வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டார்.

பதான் அவருக்கு ஈடு கொடுத்து ஆடினாலும் 36 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 130 ஆக இருந்தது. யூசுப் ஆட்டமிழந்த அடுத்த பந்தை பாண்டே சிக்ஸருக்கு விரட்டினார். 27 பந்துகளில் 44 ரன்கள் தேவை என்ற நிலையில், ஷகிப் அல் ஹசன் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

சென்ற போட்டியில் டைரக்ட் ஹிட் அடித்து ரெய்னாவை வெளியேற்றிய கேப்டன் பெய்லியே, இன்று டைரக்ட் ஹிட் அடித்து ஷகிப்பை ஆட்டமிழக்கச் செய்தார். ஸ்கோர் 168-ஆக இருந்த போது, டோஸ்சேட் 4 ரன்னுக்கு கரன்வீர் வீசிய பந்தில் வீழ்ந்தார். ஆனால், களத்தில் இருந்த பாண்டேவை எந்த பந்துவீச்சாளராலும் வீழ்த்த முடியாமல் போனது. தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரி மழையில் ரசிகர்களை அவர் நனைக்க ஆரம்பித்தார்.

டோஸ்ட்சேட் ஆட்டமிழந்த அடுத்த இரண்டு பந்துகளை முறையே சிக்ஸர் மற்றும் பவுண்டரிக்கு அனுப்பியதால் 19 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது. ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் பாண்டே 94 ரன்களுக்கு (50 பந்துகள், 7 பவுண்டரி, 6 சிக்ஸர்) ஆட்டமிழந்தார். 3 ஓவர்களில் 21 ரன்கள் தேவை என்று, அப்போதும் ஆட்டம் கொல்கத்தாவுக்கு சாதகமாகவே இருந்தது.

அக்‌ஷர் படேல் வீசிய அடுத்த ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே வர, 2 ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற கட்டத்தில் அனுபவமிக்க மிட்சல் ஜான்சன் பந்துவீச வந்தார். 2-வது பந்தில் யாதவ்வை அவர் அட்டமிழக்கச் செய்தார். மேலும் 2 ரன்கள் மட்டுமே அடுத்தடுத்த பந்துகளில் வர, அந்த ஓவரின் கடைசி பந்தை சாவ்லா சிக்ஸருக்கு அனுப்ப, கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று சூழல் மாறியது.

20-வது ஓவரின் முதல் பந்தை சந்தித்த சுனில் நரைன், ரன் எடுக்காமல் தடுத்து ஆடினார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்து சாவ்லாவிற்கு பேட்டிங் வாய்ப்பை மாற்றினார். 3-வது பந்தில் சாவ்லா பவுண்டரி அடிக்க 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கொல்கத்தா 7-வது ஐபிஎல் தொடரை வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற கொல்கத்தா பஞ்சாபை பேட்டிங் செய்ய அழைத்தது. சென்ற போட்டியில் சதம் அடித்த சேவாக், இன்று 10 பந்துகளில் வெறும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய வொஹ்ரா தனது வழக்கமான அதிரடி பாணியுடனே ஆடினார். சேவாக் வெளியேறியதைத் தொடர்ந்து ஆட வந்த கேப்டன் பெய்லி 1 ரன்னிற்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின் களமிறங்கிய சாஹா, வொஹ்ராவுடன் இணைந்து வலிமையான ஸ்கோருக்கான தளத்தை உருவாக்கினர். வொஹ்ரா 67 ரன்களுக்கு (52 பந்துகள், 6 பவுண்டரி, 2 சிக்ஸர்) சாவ்லா வீசிய 18-வது ஓவரில்தான் ஆட்டமிழந்தார். வொஹ்ரா - சாஹா இணை 72 பந்துகளில் 129 ரன்களைக் குவித்தது.

மேக்ஸ்வெல் இன்று முதல் பந்தில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். ஆனாலும் சாஹா தனது விளாசலை விடவில்லை. நட்சத்திர பந்துவீச்சாளர் சுனில் நரைன் வீசிய 19-வது ஓவரில், 2 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 17 ரன்களை சாஹா எடுத்தார். அந்த ஓவரின் 5-வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பியதன் மூலம் 49 பந்துகளில் தனது சதத்தை அவர் கடந்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 199 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. சாஹா ஆட்டமிழக்காமல் 115 ரன்களை (55 பந்துகள், 10 பவுண்டரி, 8 சிக்ஸர்) எடுத்திருந்தார்.