புதுக்கோட்டை அருகே ஒரு கௌரவக் கொலை?

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் பெரியகோட்டை ஊராட்சியில் உள்ளது கொத்தகப்பட்டி எனும் குக்கிராமம்.

குடிசை வீடுகள் நிறைந்துள்ள இக்கிராமத்தில் பெரும்பாலானோர் கூலிவேலையை மட்டுமே நம்பி உள்ளனர். பல சமூக மக்கள் அடுத்தடுத்த குடியிருப்புகளாக ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நிலையில் அதே கிராமத்தில் உள்ள காட்டாற்றின் ஒரு கரையில் குடிசை வீட்டில் வசிப்பவர்கள் சுப்பிரமணியன், சுலோக்சனா. கூலித்தொழிலாளிகளான இவர்களது மகன் சூரியமூர்த்தி.


எட்டாம் வகுப்பு படித்திருந்த இவருக்கும் அதே கிராமத்தில் ஆற்றின் மற்றொரு கரையில் குடிசை வீட்டில் வசிக்கும் கூலித்தொழிலா ளர்களான ராஜேந்திரன், கனகவள்ளி தம்பதியின் மகள் அரசுப் பள்ளியில் படித்துவந்த ராதிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது சந்திப்புகளைப் பார்த்த இருவரது வீட்டாரும் கண்டித்துள்ளனர். இருந்தாலும் காதல் தொடர்ந்துள்ளது. இதையடுத்து ராதிகாவை அவர்களது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதாலும், ராதிகாவுடன் பல நாட்கள் பேசாமல் இருந்ததாலும் ஏப்.24-ம் தேதி சூரியமூர்த்தி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன் றுள்ளார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

இந்நிலையில் பெரம்பூர், திருவோணம் போன்ற பகுதிகளில் உள்ள கோயில்களில் திருவிழா நடந்ததையடுத்து இதை தக்க சந்தர்ப்பமாக கருதிய இருவரும் தலைமறைவாக முடிவெடுத் துள்ளனர். இதையடுத்து இங்கிருந்து நண்பரோடு அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிருஷ்ணாபுரத்தில் உறவினர் வீட்டில் இருந்த ராதிகாவுடன் யாருக்கும் தெரியாமல் மே 11-ம் தேதி இரவு புறப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் அருகே சென்றபோது அங்கு காவல் துறையினர் இவர்களது வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர். அதில், ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துகளைக் கூறவே இவர்களை அங்குள்ள காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் இவர்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து இருவரையும் அவர்களது பெற்றோர் அழைத்துக்கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து இருவரும் பெற்றோர் வீட்டுக்குச் செல்லாமல் உறவினர் வீடுகளில் தங்கி இருந்துள்ளனர். இச்சம்பவம் இரு குடும்பத்தினர், உறவினர்களுக்கும் இடையே நீடித்துவந்த மோதலை மேலும் வலுவடைய செய்தது.

இந்நிலையில் மே 18-ம் தேதி கொத்தகப்பட்டியில் ராதிகா வீட்டில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் எழுந்த அழுகுரல் அமைதியாக இருந்த ஊரையே கூட்டியது. ஆனால், அங்குள்ள கொட்டகைக்குள் ராதிகா தூக்குப்போட்டு இறந்துவிட்டதாக சிலர் கூறிவிட்டு உடனே கட்டிலில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த ராதிகாவின் உடலை அருகேயுள்ள தைலமரக்காட்டில் வைத்து தகனம் செய்துவிட்டனர்.

இதையறிந்த அந்தக் கிராமத்தில் இருந்த சூரியமூர்த்தியின் குடும்பத்தினர் அந்த ஊரை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டனர். நாட்கள் பல கடந்த நிலையில், கொத்தகப்பட்டி ராதிகாவின் மரணம் கௌரவக் கொலையா என்பதன் உண்மையைக் கண்டறிய வேண்டும். தலித் இளைஞரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் துண்டறிக்கை அடித்து ஊரெங்கும் ஒட்டியுள்ளனர். இதையறிந்து அந்த ஊருக்குள் விசாரிக்கச் சென்ற உடனே வீட்டுக்கு வெளியே அமர்ந்திருந்தவர்கள்கூட எழுந்து உள்ளே சென்றுவிட்டனர். வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். சிலரோ யாரிடமும் இந்த சம்பவம் தொடர்பாக பேச வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள் என்கின்றனர். அதிலும் சிலர் மட்டுமே இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து ராதிகா தரப்பினரோ எனது மகள் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். அவ்வளவுதான் என்கிறார்கள். ஆனால், கந்தர்வ கோட்டை, கறம்பக்குடி பகுதியெங்கும் “இது ஒரு தலித் பையனை காதலித்தது, அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென ஒத்தக்காலில் நின்றது. அதனால், மாற்றுச் சமூகத்தை சேர்ந்த சிலர் கூடிப் பேசி, கௌரவத்துக்காக அந்தப் பெண்ணைக் கொலை செய்துள்ளார்கள்” என்று பேசத் தொடங்கியுள்ளனர்.

“மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியனின் தொகுதியில்தான் இப்படி ஒரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது. இதை உடனடியாக கையில் எடுத்து காவல்துறை விசாரிக்க வேண்டும்” என்ற கோரிக்கை இங்கே எழுந்தபடி உள்ளது.