ரசிகருக்கு விஜயகாந்த் விட்டார் பளார்

கட்சிக்காரர்களுக்கு பளார் விட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிற தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மலேசியாவில் தன்னுடன் புகைப்படம் எடுத்தவரை கன்னத்தில் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படம், ‘சகாப்தம்‘. இதற்கு லொகேஷன் பார்க்க, மலேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கோத்த கினபாலு என்ற பகுதிக்கு வந்தார் விஜயகாந்த். அவருடன் அவர் மனைவி பிரேமலதாவும் வந்திருந்தார்.

 அங்குள்ள சுதேரா ஹார்பர் ரிசார்ட்டில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.கடந்த திங்கட்கிழமை அந்த பகுதியை சுற்றிப்பார்த்த விஜயகாந்தும் அவர் மனைவியும் அங்கு கடை வைத்திருக்கும் தமிழர்களிடம் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர், ‘நாளைக்கு கிளம்பிருவோம். தலைவரோட போட்டோ எடுக்கணும்னா காலையில வாங்க‘ என்று பிரேமலதா அங்கிருந்த தமிழர்களிடம் சொன்னாராம்.அவர்கள் கும்பகோணம், பாண்டிச்சேரி, காரைக்குடி பகுதியை சேர்ந்தவர்கள். இதை கேட்டு குஷியான அவர்களில் 6 பேர், காலையில் ரிசார்ட்டுக்கு சென்றனர். அப்போது, அறையை காலி பண்ணுவதற்காக பிரேமலதா ரிசப்ஷனுக்கு சென்றுவிட்டார். விஜயகாந்த்தும் கைடு ஒருவரும் வெளியே நின்றிருந்தனர். 

விஜயகாந்திடம் விஷயத்தைச் சொன்னதும் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒப்புக்கொண்டார். இரண்டு இரண்டு பேராக நின்று அவருடன் போட்டோ எடுத்தனர். பிறகு அவர்களுடன் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.அப்போது காரைக்குடியை சேர்ந்த ஷாஜகான் என்ற வாலிபர் மீண்டும் ஒருமுறை விஜயகாந்துடன் நின்று போட்டோ எடுக்க முயன்றார்.கடுப்பான அவர், ‘ஏ என்ன நீ, போட்டோ எடுத்து விளையாடிட்டு இருக்கியா?’ என்று ஷாஜகான் கன்னத்தில் பொளேர் என்று ஒரு போடு போட்டார். 

இதை எதிர்பார்க்காத ஷாஜகான் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டார். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பிரேமலதாவிடம், நடந்த விஷயத்தை சொன்னார்கள் மற்றவர்கள்.‘ஏங்க இப்படி பண்ணுனீங்க?‘ என்று பிரேமலதா கோபத்துடன் விஜயகாந்திடம் கேட்க, அதற்கு அவர், ‘இப்ப என்ன, மன்னிப்பு கேட்கணுமா...? ஸாரி... ஸாரி... ஸாரி... போதுமா?‘‘ என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.‘தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு சொல்வாரே...‘ என்று முணு முணுத்தபடியே அவர்கள் திரும்பினர். நாடு கடந்து வந்த விஜயகாந்துடன் புகைப்படம் எடுக்கச் சென்றால், இப்படியா பண்ணுவார் என்று ஷகில், ஷாஜகான் உள்ளிட்ட மலேசிய தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.