கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள்

தனது நாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தயாரித்து வருகிறது. இந்த தகவல்களை இந்திய அரசுடன் பரிமாறிக் கொள்வதோடு, மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாக அந்நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் இந்தியர்களின் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் பதுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந் தது. 

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கடந்த 2009ம் ஆண்டு மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2011 ஜூலை 4ம் தேதி உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆனால், முந்தைய அரசு இதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கருப்பு பணம் வெளிக்கொண்டு வரப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். தனி நபர் வருமானமும் உயர்ந்திருக் கும். வருமானவரி விகிதமும் குறைந்திருக்கும். அந்த எண்ணத்தில்தான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 கருப்பு பண விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜ ஏற்கனவே உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் கடந்த மே 26ம் தேதி நடைபெற்றது. இதில், வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை வெளிக்கொண்டுவர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் படி, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த குழுவுக்கு உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைவராக நியமிக்கப்பட்டார். நிதி, வருவாய் மற்றும் பொருளாதார நிர்வாக துறை சார்ந்த நிபுணர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் முதல் கூட்டத்தில் குழுவின் துணை தலைவர் அரிஜித் பசயாத் மற்றும் உறுப்பினர்களான நிதி, வருவாய், ரிசர்வ் வங்கி துணை கவர்னர், புலனாய்வு, அமலாக்க பிரிவு, சிபிஐ இயக்குனர்கள் உட்பட 11 துறை சார்ந்த உயரதிகாரிகள், கருப்பு பணம் குறித்து தாங்கள் ஏற்கெனவே விசாரணை நடத்திய அறிக்கையை எம்.பி.ஷா முன்பு சமர்ப்பித்தனர்.

இதற்கு முன்பே, வெளிநாடுகளில் கருப்பு பணம் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்த கருப்பு பணம் எவ்வளவு என்பது குறித்து ஆராய கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சிறப்பு குழு அமைத்தது. 18 மாதங்களில் இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டது. 

ஆனால், 3 ஆண்டுகளாகியும் இதுவரை அறிக்கை தயாரிக்கப்படவில்லை. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள மொத்த கருப்பு பணத்தின் மதிப்பு குறித்தும், எந்தந்த வழிகளில் கருப்புப்பணம் உருவாக்கப்படுகிறது என்பது குறித்தும் இக்குழு ஆராய வேண்டியுள்ளது, தகவல் அறியும் சட்டத்தின்கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

சுவிஸ் வங்கிகளில் பதுக்கல் ஏன்?

பெரும்பாலான கருப்பு பணம் சுவிஸ் வங்கிகளில்தான் டெபாசிட் செய்யப்படுகின்றன. ஏனெனில், வாடிக்கையாளர் பற்றிய ரகசியங்கள் அங்கு பாதுகாக்கப்படுகின்றன. வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிகம் கொண்ட 283 வங்கிகள் சுவிட்சர்லாந்தில் உள்ளன. இவற்றில் யு.பி.எஸ், கிரெடிட் சுசீ ஆகியவை மிகப்பெரிய வங்கிகள். 

சுவிஸ் தேசிய வங்கியின் மத்திய குழு, வங்கி டெபாசிட் விவரம் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2013ல் இந்தியர்கள் 2.03 பில்லியன் சுவிஸ் பிராங்சுக்கு அதிகமாக டெபாசிட் செய்துள்ளதாக கூறியுள்ளது. இது 2012ல் டெபாசிட் செய்யப்பட்டதை விட 40 சதவீதம் அதிகம். ஏனெனில், 2012ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் தொகை வரலாறு காணாத அளவுக்கு மூன்றில் ஒரு பகுதியாக குறைந்தது.

மேலும், இந்தியர்களின் டெபா சிட் 40 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், உலக அளவில் வாடிக்கையாளர்கள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்த ஒட்டுமொத்த தொகை மாறாக சுவிஸ் வங்கியில் மற்ற நாட்டுக்காரர்கள் வைத்திருக்கும் தொகை இதே காலக் கட்டத்தில் சுமார் 90 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளன. 

சுவிஸ் வங்கியின் பொறுப்புகள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை என்று குறிப்பிட்டுள்ள இந்தத் தொகையில் கறுப்புப் பணம் கணக்கில் வராது என்று தெரிகிறது. கருப்பு பணம் குறித்த விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படுமா? எந்தெந்த வங்கியில் யார் எவ்வளவு பணம் பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு சுவிஸ் அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் அல்லது நிறுவனங்கள் சார்பில் யார் எவ்வளவு பணம் டெபாசிட் செய்துள்ளனர். 

உண்மையில் யார் மூலமாக இந்த பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என கண்காணித்து வருகிறோம். இந்தியர்கள் இந்தியாவை தவிர வெளிநாடுகளில் உள்ள அறக்கட்டளை, வெளிநாட்டில் இயங்கும் நிறுவனங்கள், சட்ட அமைப்புகள் மூலம் பினாமிகள் பெயரில் வரி ஏய்ப்பு செய்து முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து தகவல்களை சேகரித்துள் ளோம். உண்மையான பயனாளிகள் யார் என்பதை ஆராய்ந்து வருகிறோம். தற்போது இரு தரப்பு தகவல் பரிமாற்ற ஒப்பந்தத்த்தில் ரகசிய தகவல் பாதுகாப்பு அம்சம் இடம்பெற்றி ருப்பதால், முதலீடு செய்துள்ள தனிப்பட்டவர்கள் விவரங்களை உடனடியாக வெளியிடுவதற்கு வழியில்லை.

அதேநேரத்தில், இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு உட்பட்டு, கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் ரூ.14,000 கோடி டெபாசிட் செய்துள்ளதாக வும், முந்தைய ஆண்டை விட இது 40 சதவீதம் அதிகரிப்பு என்று சுவிஸ் தேசிய வங்கி சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட புள்ளி விவரங்கள் பற்றி கேட்டபோது, அவை இந்தியர்கள் டெபாசிட் செய்ததாகத்தான் அந்த புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம் என்று கூற முடியாது’ என்றார்.

நடவடிக்கை எப்போது?

கருப்பு பண விவகாரம் பல ஆண்டுகளாக தீராத பிரச்னையாக உள்ள நிலையில், சுவிஸ் வங்கி மத்திய அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள முன்வந்திருப்பது, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றமாகும். இது குறித்து கருப்பு பண விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் நீதிபதி எம்.பி.ஷா கூறுகையில், ‘சுவிஸ் அரசு வழங்கும் பட்டியலில் உள்ளவர்களை கண்காணித்து, அதில் உள்ள விவரங்களை உறுதிப்படுத்திய பிறகு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.