எதிர்க்கட்சி தலைவர் பதவியேற்கும்படி ராகுலுக்கு நிர்ப்பந்தம்

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஏற்க வேண்டும். கட்சி கடும் நெருக்கடியை சந்திக்கும் இந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்பதை, அவர் தட்டிக் கழிக்கக் கூடாது' என்றும், காங்., இளம் தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

                                       

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்குள் மாறுபட்ட குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. இந்த விஷயத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், சோனியாவுக்கு ஆதரவாகவும், இளம் தலைவர்கள் பலர், ராகுலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளனர். அதேநேரத்தில், இரு தரப்பினரும், சோனியா, ராகுல் தவிர, மூன்றாம் நபர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வருவதை விரும்பவில்லை என்பதையும், அவர்களின் அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

இதுதொடர்பாக, காங்., மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சோனியா ஏற்க வேண்டும். ஏதாவது ஒரு சூழ்நிலை காரணமாக, அவர் அந்தப் பதவியை ஏற்காவிட்டால், ராகுல் ஏற்க வேண்டும். மூன்றாம் நபர் ஒருவர் இந்தப் பொறுப்பை ஏற்றால், ராகுலுக்கு பொறுப்பை ஏற்பதில் அக்கறை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இது ஒருபுறமிருக்க, ராகுலுக்கு ஆதரவான தலைவர்கள் கூறியதாவது:கட்சியின் மூத்த எம்.பி.,யான கமல்நாத்தை, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராக்கும் முடிவை, ராகுல் கைவிட வேண்டும். சோனியாவுடன் கலந்தாலோசித்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்று, கட்சிக்கு புத்துயிரூட்டும் பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இவரைப் போலவே, பல மாநிலங்களைச் சேர்ந்த, காங்., தலைவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

தொடரும் வார்த்தை போர்


எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம் தலைதூக்கியுள்ள நேரத்தில், லோக்சபா தேர்தல் தோல்வி தொடர்பாக, ராகுல் ஆதரவாளர்கள் மற்றும் அவரின் எதிர்ப்பாளர்கள் இடையேயான வார்த்தைப் போரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ராகுல் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் நேரத்தில், ஓரிருவரிடம் மட்டும், ராகுல் ஆலோசனை கேட்கவில்லை; பலரிடம் ஆலோசனை கேட்டார். சாதாரண மக்களிடமும் பேசி, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை குறிவைத்தே, பா.ஜ.,வினர் பிரசாரம் செய்தனர். ஆனால், சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையில், காங்கிரஸ் பிரசாரம் செய்ய வேண்டியிருந்தது. கட்சியின் மூத்த தலைவர்களின் சரியான வழிகாட்டுதல் இல்லாததே, கட்சியின் தோல்விக்கு காரணம். ராகுலால் தோல்வி இல்லை.இவ்வாறு, ராகுல் ஆதரவாளர்கள் கூறினர்.

ராகுல் எதிர்ப்பாளர்கள் கூறுகையில், 'ராகுலின் ஆலோசகர்கள் தங்களின் இஷ்டம் போல் செயல்பட்டனர். மற்றவர்கள சொல்வதை எல்லாம், அவர்கள் காதில் வாங்கவில்லை. தேர்தல் அனுபவம் இல்லாத அவர்களால் தான், கட்சி தோல்வி கண்டுள்ளது' என்றனர்.

ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு அப்பாற்பட்டு, சிந்திக்க வேண்டிய தருணம் காங்கிரசுக்கு வந்துள்ளது. ராஜீவ் மற்றும் சோனியாவின் மகன் என்ற முறையில், கட்சியில் அதிகாரம் செலுத்தி வருகிறார் ராகுல். ஜனநாயக முறையில், அவர் கட்சி பொறுப்புக்கு வரவில்லை
பன்வர்லால் சர்மா, ராஜஸ்தான் காங்., தலைவர்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் விலக வேண்டும். அவர் விலகவில்லை எனில், அவரை கட்சி மேலிடம் நீக்க வேண்டும். பிரியங்காவை கட்சியின் புதிய தலைவராக்க வேண்டும். பிரதமர் பதவி எவ்வளவு முக்கியமானது என்பதை, மக்கள் உணர்ந்துள்ளனர் 
முஸ்தபா,கேரள காங்., மூத்த தலைவர்

அமைச்சருக்கான சலுகை

*லோக்சபா மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, 545. இவற்றில், 10 சதவீதம், அதாவது, 55 உறுப்பினர்களை கொண்டிருக்கும் கட்சியை சேர்ந்தவருக்கே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படும்.
*எதிர்க்கட்சி தலைவர் பதவியை, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவருக்கே, அதுவும் எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கே வழங்க முடியும். கூட்டணி கட்சிகள் சேர்ந்து தேர்ந்தெடுக்கும் தலைவருக்கு வழங்க முடியாது.
*அதனால், தனிப்பட்ட ஒரு கட்சி, 55 எம்.பி.,க்களை கொண்டிருக்க வேண்டும்.
*எதிர்க்கட்சித் தலைவர் பதவி, கேபினட் அமைச்சர் அந்தஸ்து கொண்டது.
*கேபினட் அமைச்சருக்குரிய சம்பளம், சலுகைகள் மற்றும் இதர படிகள் எல்லாம், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உண்டு.
*சி.பி.ஐ., இயக்குனர் மற்றும் தலைமை லஞ்ச ஒழிப்பு ஆணையரை தேர்வு செய்யும் கமிட்டிகள் உட்பட, பல முக்கியமான கமிட்டிகளில், எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினராக இடம் பெறுவார்.
*எதிர்க்கட்சித் தலைவர் பதவி, எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும் கிடைக்கவில்லை எனில், கூடுதல் எம்.பி.,க்களை கொண்ட, தனிப்பெரும் கட்சியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவராக செயல்படலாம். ஆனால், அவருக்கு எந்த சலுகைகளும் கிடைக்காது.