மீண்டும் கமர்ஷியல் பக்கம் திரும்பும் கார்த்தி

அட்டகத்தி' இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் 'மெட்ராஸ்' என்னும் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

அப்படத்தினைத் தொடர்ந்து 'குட்டிப்புலி' இயக்குநர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி. இப்படத்தினையும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.


கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவிருக்கிறார். 'கொம்பன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இப்படத்தில், ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். 'நான் கடவுள்’, 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைத்த சூப்பர் சுப்பராயன் இப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். யுவன் இசையமைக்க இருக்கிறார்.

ஜுன் 3ம் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பினை துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். மூன்று மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க இருக்கிறார்கள்.

'கொம்பன்' படத்தினை முடித்துவிட்டு, லிங்குசாமி இயக்கத்தில் 'எண்ணி 7 நாள்' என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார் கார்த்தி.