கெயில் விபத்து நடந்தது எப்படி?விரிவான செய்தித் தொகுப்பு

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் கெயில் நிறுவனத்தின் பைப்லைன் வெடித்துச் சிதறியதில் 15 பேர் பலியாகினர், சுமார் 20 பேர் பலத்த தீக்காயங்கள் அடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் கிராமத்தில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த கெயில் நிறுவனத்தின் பைப்லைனில் இன்று அதிகாலை திடீரென் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் 15 பேர் உடல் கருகி பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர். விபத்தில் 14 பேர் பலியானதை ஆந்திரம் நிதியமைச்சர் யானமலா ராமகிருஷ்ணுடு உறுதி செய்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் நீது குமார் பிரசாத், நிலைமையை நேரில் ஆய்வு செய்த பின்னர் கூறுகையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. இருப்பினும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

விபத்து நடந்தது எப்படி?

15 உயிர்களை பறித்த கெயில் பைப்லைன் விபத்து எப்படி நடந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.

கிழக்கு கோதாவரி நகரம் கிராமம் மமிடிகுடுரு மண்டல் பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. எரிவாயு சேகரிப்பு நிலையத்தில் இருந்து 200 அடி தொலைவில் இருந்த பைப்லைனில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஏற்பட்டு அந்தப்பகுதி முழுவதும் எரிவாயு நிரம்பியுள்ளது.

அதிகாலை 4 மணி அளவில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் அடுப்பு பற்றவைத்தபோது காற்றில் பரவி இருந்த எரிவாயு பற்றிக்கொள்ள பைப்லைன் வெடித்துச் சிதறி அப்பகுதியில் இருந்த தென்னந்தோப்பு மற்றும் குடியிருப்புப் பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் இரங்கல்:

கெயில் பைப்லைன் விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

விபத்து தொடர்பாக பெட்ரோலியத் துறை அமைச்சகம், கெயில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும். மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி:

கெயில் பைப்லைன் விபத்தில் 15 பேர் உடல் கருகி பலியான சம்பவத்திற்கு ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: "துணை முதல்வர் சின்னப்பராஜாவை உடனடியாக சம்பவ பகுதிக்கு நேரில் சென்று நிலவரத்தை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுவதை தடுப்பதற்கு விரிவான திட்டங்களை வகுக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

13 சடலங்கள் மீட்பு:

கிழக்கு கோதாவரி மாவட்ட நிர்வாகத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 13 சடலங்கள் சம்பவ பகுதியில் இருந்து முற்றிலும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் இறந்தனர் என தெரிவித்தார்.

உற்பத்தி நிறுத்தம்:

கெயில் பைப்லைனில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓ.என்.ஜி.சி எரிவாயு வயலில் உற்பத்தியை நிறுத்தியது அந்நிறுவனம்.

விசாரணைக்குழு அமைப்பு:

கெயில் பைப்லைன் விபத்தை அடுத்து, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆந்திரம் செல்ல இருப்பதாக தகவல்.

பைப்லைன் வெடி விபத்து குறித்து பெட்ரோலிய துறை அமைச்சகம் விரிவாக விசாரிக்க விசாரணைக் குழு அமைத்து அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் இரங்கல்:

ஆந்திரம் கெயில் பைப்லைன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதி:

பைப்லைன் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதுதவிர விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 கருணைத்தொகை வழங்க பெட்ரோலியத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சந்திரபாபு விரைந்தார்:

கிழக்கு கோதாவரி மாவட்டம் கெயில் பைப்லைன் விபத்தை அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது டெல்லி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு ஆந்திரம் திரும்புகிறார். அவருடன் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரும் வருகின்றனர்.

சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.