கணவர் இறந்ததாக கூறி மாமனாரை கடத்திய மருமகள்

சொத்துக்காக மாமனாரை கடத்திய மருமகள் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர். நாமக்கல் அருகே காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேலு (59). இவருக்கு ராஜேந்திரன், ரவி. என இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ரவி, வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். 

அவரது பெயரில், தங்கவேலு 90 சென்ட் நிலத்தை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் அந்த நிலத்தை, தனது பெயருக்கே மாற்றம் செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ரவியின் மனைவி ஜெயந்தி, தங்கவேலுவிடம் சொத்தை எழுதி வாங்க திட்டமிட்டார். நேற்று, தனது கணவர் ரவி வெளிநாட்டில் இறந்து விட்டதாக கூறிய ஜெயந்தி, “நீங்கள் கையெழுத்து போட்டால் தான், சடலத்தை மீட்டு தர போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் அதற்காக நாமக்கல் டிஎஸ்பி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் எனக்கூறி, தங்கவேலுவை ஜெயந்தி மற்றும் உறவினர்கள் மோகனூர் அருகே லட்டுவாடி பகுதிக்கு காரில் கடத்தி சென்றனர். 

அங்கு அவரிடம் சொத்து பத்திரத்தில் கையெழுத்து போடும்படி மிரட்டியுள்ளனர். தான் கடத்தப்பட்டதை அறிந்த தங்கவேல், சோர்வாக இருப்பதால் டீ குடித்து விட்டு வருவதாக கூறி, வெளியே வந்தார். தனது மூத்த மகன் ராஜேந்திரனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். தந்தையை மீட்ட ராஜேந்திரன், சம்பவம் குறித்து மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, பழனிவேல், முருகேசன், மலர்விழி ஆகிய 3 பேரை கைது செய்து நாமக்கல் சிறையில் அடைத்தனர். தலைமறைவான ஜெயந்தி உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.