பறிபோகிறது கேப்டனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி?

தமிழக அரசியல் சிறிது காலம் ஓய்ந்திருந்த கட்சி தாவல் படலம் மீண்டும் அரங்கேற இருக்கிறது. தேமுதிகவைச் சேர்ந்த மேலும் 5 எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிருப்தி அணியில் ஐக்கியமாக இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதிமுக ஆட்சி அமைக்க, தேமுதிக 28 இடங்களைக் கைப்பற்றியது.

 திமுக 23 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது. இதனால் தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கிடைத்தது. ஆனால் அதிமுக- தேமுதிக இடையேயான உறவு நீண்டகாலம் நீடிக்கவில்லை. இரு கட்சிகளிடையேயான உறவு முறிந்து போன பின்னர் தேமுதிகவைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தொகுதி நலன்களுக்கான மனு கொடுக்கத் தொடங்கினர். 

இந்த பட்டியல் நீண்டு போய் கடைசியாக தேமுதிக அதிருப்தி அணியாக விஸ்வரூபமெடுத்தது. மொத்தம் 8 தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணியில் இருக்கின்றனர். மற்றொரு எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலேயே இணைந்துவிட்டார்.

மதுரை சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், திட்டக்குடி தமிழ் அழகன், அருண்சுப்பிரமணியம், மாஃபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் தனியாகத்தான் செயல்படுகின்றனர். தற்போதைய நிலையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் பலம் 19தான்.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைய, தனித்துப் போட்டியிட்ட அதிமுக அபார வெற்றி பெற்று 37 இடங்களை வசமாக்கியது.

சட்டசபை தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்ததாலேயே அதிமுக அமோக வெற்றி பெற்றது என்ற விஜயகாந்தின் வாதத்தை தவிடுபொடியாக்கி தனித்து வென்று காட்டியிருக்கிறார் ஜெயலலிதா. இதை விஜயகாந்துக்கு உணர்த்தும் வகையில் மேலும் 5 எம்.எல்.ஏக்களை அதிருப்தி அணிக்கு இழுக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாம்.

அப்படி மேலும் 5 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்குப் போகும் நிலையில் விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பறித்துவிடுவது என்று முடிவில் இருக்கிறாராம் முதல்வர் ஜெயலலிதா.

வரும் 10-ந் தேதி தமிழக சட்டசபை கூட இருக்கும் நிலையில் இனிவரும் நாட்களில் அடுத்தடுத்து கட்சி தாவல்கள் அரங்கேறக் கூடும் என்று கூறப்படுகிறது.