பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறுமா தே.மு.தி.க.,?

பா.ஜ., கூட்டணியை விட்டு தே.மு.தி.க., வெளியேறுமா என்பது குறித்து, இன்று நடக்கவுள்ள அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - - தி.மு.க.,விற்கு மாற்றாக, பா.ஜ., உருவாக்கிய கூட்டணியில், 14 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிப் பெற முடியவில்லை; 10 தொகுதிகளில், 'டிபாசிட்' இழந்ததுதான் மிச்சம்.தேர்தல் படுதோல்வியால், தே.மு.தி.க., மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி உள்ளது.


 இருப்பினும், கூட்டணிக்கு தலைமை ஏற்ற, பா.ஜ., மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பா.ஜ., மேலிட தலைமையிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, விஜயகாந்த் கட்சியை கரையேற்றி விடுவார் என, தே.மு.தி.க., நிர்வாகிகள் நம்பினர்.

தே.ஜ., கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், விஜயகாந்தையும், பிரேமலதாவையும் பிரதமர் மோடி, கவுரப்படுத்தியதால், அந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கும் விஜயகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.இதற்காக, பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் விஜயகாந்த் டில்லி சென்றார். ஆனால், முதல் வரிசையில் இடம் ஒதுக்கவில்லை என்று கூறி, விழாவை விஜயகாந்த் புறக்கணித்ததாக தகவல் வெளியானது.இதையடுத்து, மனைவி அல்லது மைத்துனருக்கு பதவி பெற, பிரதமர் மோடியை சந்தித்து பேச விஜயகாந்த் முயற்சித்தார். ஆனால், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இருப்பினும், பா.ஜ., மேலிட தலைவர்களை சந்திக்கும்படி விஜயகாந்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால், அதை தவிர்த்த அவர் சென்னை திரும்பினார்.

இதனிடையே, மோடி - ஜெயலலிதா நேற்றைய சந்திப்பிற்கு பின், பா.ஜ., -- அ.தி.மு.க., இடையே தமிழகத்தில் உறவு மலர அதிக வாய்ப்பிருப்பதாக, விஜயகாந்த் நம்புவதாக தெரிகிறது. இதனால், கடும் விரக்தியில் உள்ள தே.மு.தி.க., தலைமை, கூட்டணியில் இருந்து விலக திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.தேர்தல் தோல்வி குறித்து ஆராய, தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள, அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. பா.ஜ., கூட்டணியில் நீடிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, தெரிகிறது.

இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:அ.தி.மு.க.,வுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காததால், 100 நாட்களில் கூட்டணி முடிந்தது. பா.ஜ.,வுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்காததால், இப்போது கூட்டணி முறியும் நிலையில் உள்ளது. கட்சி தலைமையின் கோபமும், அணுசரித்துபோகும் தன்மையும் இல்லாதது தான் இதற்கு காரணம். இவ்வாறு, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.