திருமண மண்டபத்தில் மணப்பெண் மரணம்

தேனி நகர் அல்லிநகரம் அருகே குறிஞ்சி நகரில் குடியிருப்பவர் ஈஸ்வரன். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 3வது மகள் ஜோதிராணிக்கும் (19), அதே பகுதியில் வசிக்கும் அழகர் மகன் மணிகண்டனுக்கும் நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது.

நேற்று முன்தினம் அல்லிநகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு தரப்பு வீட்டாரும் பங்கேற்றனர். நேற்று காலை 8.30 மணி அளவில் மண்டபத்தில் திருமணத்திற்காக மணப்பெண் ஜோதிராணியை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஜோதிராணி மயங்கி விழுந்தார். உறவினர்கள் இவரை தேனி அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஜோதிராணி முன்னதாகவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

சம்பவம் குறித்து ஜோதிராணியின் தந்தை ஈஸ்வரன் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.