கிறிஸ் கெய்ல் பேட்டிங் தாண்டவம் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கிறிஸ் கெய்லின் 2வது இன்னிங்ஸில் அதிரடி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

வெற்றி பெறத் தேவை 93 ரன்கள். கிறிஸ் கெய்ல் இருபது ஓவர் கிரிக்கெட் என்று முடிவெடுத்து விட்டார் போலும். 7 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசி 46 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ, பிராத்வெய்ட் 14 நாட் அவுட்டாக இருந்தார். 13.2 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டஸ் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு டெஸ்ட் வெற்றியைச் சாதித்தது.

நியூசிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீசை வெறுப்பேற்றி 331 ரன்களை எடுத்து ஒருவழியாக ஆல் அவுட் ஆக. மழை பெய்யத் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸுக்குக் கிடைத்த அரிய டெஸ்ட் வெற்றி வாய்ப்பை இயற்கை பறித்து விடும் நிலைமை இருந்தது.

ஆனால் இயற்கைத் தெய்வம் வழிகொடுத்தது. ஆட்டம் தொடங்கியது. முதலில் சவுதீ மற்றும் போல்ட் ஓவர்களில் 2 பவுண்டரி அடித்து கெய்ல் தொடங்கினார். ஆனால் 3வது ஓவர் முதல் முடிவு கட்டி இறங்கினார் கெய்ல். சவுதீ ஓவரில் 2 லெக் திசை பவுண்டரிகளை விளாசினார்.

இந்திய வீரர்கள் நியூசிலாந்தில் தடவு தடவென்று தடவிய போல்ட் ஓவரை கெய்ல் நன்றாகக் கவனித்தார். லெந்த் பந்தை சைட் ஸ்க்ரீனுக்கு மேலே கூரைக்கு முதல் சிக்சரைத் தூக்கி அடித்து விரட்டினார்.

பிறகு அதே ஓவரின் மற்றொரு பந்தை மேலேறி வந்து லாங் ஆஃப் திசையில் ரசிகர்கள் உட்கார்ந்திருக்கும் பகுதிக்குத் தூக்கி அடித்தார். பிறகு போல்ட் ரவுண்ட் த விக்கெட்டுக்கு மாறினார். ஆனால் கெய்ல் மாறவில்லை. இந்த முறை லாங் ஆஃப் திசையில் மீண்டும் சிக்ஸ். ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசி தாண்டவம் ஆடினார் கெய்ல்.

8வது ஓவர் சோதி வந்தார், வந்தவுடனேயே தாழ்வான ஃபுல்டாசை வீச கெய்ல் லாங் ஆன் திசையில் பந்து காணாமல் போகுமாறு ஒரு சிக்சரை விளாசினார். 28 பந்துகளில் 4 சிக்சர்களுடன் அரைசதம் எடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அடிக்கும் இரண்டாவது அதிவேக அரை சதமாகும் இது.

மீண்டும் ஒரு பந்து கழித்து அதே தாழ்வான ஃபுல்டாஸ். இந்த முறை ஒரு மாற்றத்திற்காக கெய்ல் மிட்விக்கெட்டில் பெரிய சிக்சரை விளாசினார். 9வது ஓவரில் கிரெய்க் வீச வந்தார் அவரை எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு மட்டையடி சிக்சரை விளாசினார் கெய்ல். கடையில் 14வது ஓவரில் வில்லியம்சன் பந்தை உடைந்து போகும் விதமாக பாயிண்டில் பவுண்டரி அடித்தார். அதுதான் வெற்றி ஷாட்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரை சமன் செய்துள்ளது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது.

முன்னதாக 257/8 என்று துவங்கிய நியூசிலாந்து விக்கெட்டை இழக்காமல் மிகவும் வெறுப்பேற்றியது. வாட்லிங் 38 ரன்களுடனும், மார்க் கிரெய்க் 29 ரன்களுடனும் களமிறங்கினர். வாட்லிங் 66 ரன்களை எடுக்க மார்க் கிரெய்க் 67 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 9வது விக்கெட்டுக்காக 99 ரன்களை எடுத்ததோடு வெஸ்ட் இண்டீஸை சுமார் 42 ஓவர்கள் காத்திருக்கச் செய்தனர். 

கடைசியில் வாட்லிங்கை வீழ்த்த முடியவில்லை. மார்க் கிரெய்க்தான் வீழ்ந்தார். அவருக்கு ஏற்கனவே 2 கேட்ச்களை வேறு கோட்டை விட்டது வெஸ்ட் இண்டீஸ். கடைசியில் இவர் ரோச் பந்தை எட்ஜ் செய்து நிம்மதி வழங்கினார். போல்ட் தன் பங்கிற்கு 21 பந்துகள் நின்று வெறுப்பேற்றினார். கடைசியில் அவர் கேப்ரியல் பந்தில் அவுட் ஆக நியூசிலாந்து 331 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதன் பிறகு மழை அச்சுறுத்தலுடன் களமிறங்கிய கெய்ல், 93 ரன்கள் இலக்கை ஊதித் தள்ளினார். நியூசிலாந்து 8 டெஸ்ட் போட்டிகளாக தோல்வியடையாமல் இருந்து வந்ததை வெஸ்ட் இண்டீஸ் நேற்று உடைத்தது.