மோடிக்கு அருகில் அத்வானிக்கு இருக்கை ஒதுக்கீடு!

லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகில் மத்திய அரசில் எந்த பதவியும் வகிக்காத பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு 2வது இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் லோக்சபா கூட்டத் தொடரில் இன்று முதல் முறையாக கலந்து கொண்டார். அவரது இருக்கைக்கு அருகில் 2-வது இடத்தில் அத்வானிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு அதில் அவர் அமர்ந்து இருந்தார்.


அத்வானி மத்திய அமைச்சராகவோ அல்லது எந்த அரசு பதவியிலும் இல்லை. எம்.பி.யாக மட்டுமே இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு 2-வது இடத்தில் இருக்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், வெங்கையாநாயுடு, ராம்விலாஸ் பஸ்வான், முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். எதிர்க்கட்சி வரிசையில் சோனியா அமர்ந்து இருந்தார். அவருக்கு அருகில் மல்லிகார்ஜுன கார்கே, வீரப்ப மொய்லி அமர்ந்து இருந்தனர். மற்றொரு எதிர்க்கட்சி வரிசையில் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், அ.தி.மு.க. எம்.பி.க்கள் குழு தலைவர் தம்பித்துரைக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.