ஆன்–லைன் மூலம் மசாஜ் கிளப்புகளில் விபசாரம்

சென்னையில் செயல்படும் சில மசாஜ் கிளப்புகளுக்கு, ஆன்–லைன் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து, விபசார தொழில் நடப்பதாக நிறைய புகார்கள் வந்தன.எனவே மசாஜ் கிளப்புகளை தீவிரமாக கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி, விபசார தடுப்பு போலீசாருக்கு கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், விபசார தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான தனிப்படை போலீசார், அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

                      

சென்னை அண்ணாநகர் 2–வது மெயின் ரோடு, ‘எப்’ பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் சொகுசு வீட்டில், மசாஜ் கிளப் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குறிப்பிட்ட வீட்டில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். சோதனையில் அங்கு விபசாரம் நடப்பது தெரிய வந்தது.

பானு கைது

அந்த வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் 5 பேர் மீட்கப்பட்டனர். விபசார தொழில் செய்து வந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த பானு (வயது 36) என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

அவர் ஏற்கனவே, மசாஜ் கிளப் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். தற்போது சொந்தமாக மசாஜ் கிளப்பை தொடங்கி நடத்தி வந்துள்ளார். வருமானத்திற்காக, மசாஜ் செய்யும் பெண்களை விபசாரத்தில் ஈடுபட வைத்து, பணம் சம்பாதித்துள்ளார்.

இதேபோல, நீலாங்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள மசாஜ் கிளப்பில் விபசாரம் நடப்பது கண்டறியப்பட்டது. அந்த மசாஜ் கிளப்பை நடத்தி வந்த சுராஜ் (34) என்பவர் கைதானார். அவரால் விபசாரத்தில் தள்ளப்பட்ட 3 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர்.

சென்னையில் செயல்படும் மசாஜ் கிளப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும், என்று போலீசார் அறிவித்துள்ளனர்.