பள்ளிக்கு கட் அடித்த சிறுவன்... தட்டிக் கேட்ட வேலைக்காரப் பெண்ணுக்கு கத்திக் குத்து

பள்ளிக்கு செல்லாததை தட்டிக் கேட்ட வேலைக்காரப் பெண்ணைக் கத்தியால் குத்திய சிறுவனை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை செம்பூரில் உள்ள சுபாஸ்நகரில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர், மனைவியை பிரிந்து தனது 14 வயது மகனுடன் வசித்து வருகிறார். 

இவரது வீட்டில் வீட்டு வேலைகளைச் செய்வதற்காக தேஷஸ்வி(35) என்ற பெண் பணியில் உள்ளார். வழக்கம் போல, நேற்று முன்தினம் காலை வேலைக்காக வந்த போது வீட்டில் சிறுவன் மட்டும் தனியாக இருந்துள்ளான். எனவே, சிறுவனிடம் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கேட்டுள்ளார் தேஜஸ்வி. மேலும் சிறுவன் பள்ளி செல்லாமல் இருப்பதை அவனது தந்தையிடம் கூறப்போவதாக மிரட்டியுள்ளார் தேஜஸ்வி.

 இதனால் ஆத்திரம் அடைந்த அச்சிறுவன் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தேஷஸ்வியை சரமாரியாக குத்தியுள்ளான். இதில் இடது கை, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் தேஜஸ்விக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தேஜஸ்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனைக் கைது செய்து டோங்கிரியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.