தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேட்மிண்டன் போட்டி

நட்சத்திர கிரிக்கெட் மாதிரி இப்போது நட்சத்திர பேட்மிண்டன் போட்டி ஆரம்பமாகிறது. பேட்மிண்டன் எனும் இறகுப் பந்தாட்டம் வெகு பிரபலமானது. விளையாடவும் லகுவானது. இந்த விளையாட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் அனைத்து வயதினராலும் விளையாடப்பட்டு வருகிறது. இப்போது திரையுலகினரை வைத்து இந்த விளையாட்டை தொழில் முறையிலான ஒரு பெரிய போட்டியாக நடத்த முடிவு செய்துள்ளனர், 

இந்தியன் பேட்மிண்டன் செலிபிரிட்டி லீக் எனும் அமைப்பினர். இதில் கலந்து கொள்ள தமிழின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி, தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 50 நடிகர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். அவர்களில், ஆர்யா, பரத், ஜெய், ஜெயம் ரவி, சிவா, ஆரி, தமன், சுந்தர்.சி., எஸ்.பி.பி.சரண், நரேன், ஜான் விஜய், விடிவி கணேஷ், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆதி, உதய், ராகுல், கிருண்ணா, நடிகைகள் அமலா பால், ஓவியா, ராய் லட்சுமி, ரூபா மஞ்சரி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் அடங்குவர். இன்னும் பலர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்த பேட்மிண்டன் போட்டிகளுக்கான பயிற்சி வருகிற ஜுலை மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ஜுலை 8-ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது இந்தப் போட்டி. அன்றைக்கு துவக்க மட்டும்தான். தொடர்ந்து 9, 10 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடக்கின்றன. இதில், வசூலாகும் நிதியை வைத்து பேட்மிண்டன் வீரர்களின் வளர்ச்சிக்காக செலவிட உள்ளனர்.