கள்ளக்காதலி கைமாறியதால் புதிய காதலரை சிக்கவைக்க அமைச்சர்

கடந்த 13–ந் தேதி தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன், சேலம் உதவி கலெக்டர் லலிதாவதி, தாசில்தார் கண்ணன், சேலம் மாவட்ட முன்னாள் நீதிபதி பாஸ்கரன்(தற்போது சென்னையில் உள்ளார்) ஆகியோரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். ஒன்று வந்தது. அதில், ‘‘தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆகியோரை 5 நாட்களில் கொன்று விடுவோம். முடிந்தால் தடுத்து கொள்ளுங்கள்‘‘ எனக்கூறப்பட்டிருந்தது. மேலும் எனக்கு இன்னொரு செல்போன் எண்ணும் உள்ளது எனக்கூறி, எனது பெயர் கார்த்திக் என்றும் அந்த எஸ்.எம்.எஸ்.சில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி போலீசில் தாசில்தார் கண்ணன், சேலம் டவுன் போலீசில் உதவி கலெக்டர் லலிதாவதி ஆகியோர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் கொலைமிரட்டல் விவகாரம் குறித்து ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜா(சேலம் டவுன்), பால்பாண்டி(அஸ்தம்பட்டி), முத்தமிழ்( இரும்பாலை) மற்றும் ஏட்டுகள் அருள், கலை, முருகன் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

15 பேரிடம் விசாரணை

செல்போனில் எஸ்.எம்.எஸ்.சில் குறிப்பிட்டுள்ள கார்த்திக் யார்? என போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த செல்போன் எண், சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு உரியது என தெரியவந்தது.

கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தான் அதுபோன்ற எஸ்.எம்.எஸ்.சை அனுப்பவில்லை என்று தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் எஸ்.எம்.எஸ். வந்த இன்னொரு சிம்கார்டு எண்ணை வைத்து விசாரணையை தொடங்கினார்கள். அந்த சிம்கார்டு எண்ணை போலீசார் தொடர்பு கொண்டபோது, ‘டொயிங்... டொயிங்‘‘ என்ற சத்தம் மட்டுமே வந்தது. பின்னர்தான் அந்த சிம்கார்டு உடைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதினார்கள். இது தொடர்பாக போலீசார் தர்மபுரியை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 15 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

எம்.ஏ.,பி.எட் பட்டதாரி வாலிபர் கைது

போலீசாரின் விடாமுயற்சியினால், கொலைமிரட்டல் விடுத்தது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பனைகுளத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரது மகன் அன்புச்செல்வன்(வயது 29) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தர்மபுரி மாவட்டம் பனைகுளம் சென்றனர். அங்கு அன்புச்செல்வனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் எம்.ஏ.,பி.எட் ஆங்கிலம் இலக்கிய பட்டப்படிப்பு முடித்திருப்பதாகவும், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், கூலி வேலைக்கு சென்று வருகிறேன் என்றும், தற்போது நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்றும், தனக்கு அதில் தொடர்பு இல்லை என்றும் முதலில் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

இருப்பினும் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், சேலம் மாவட்ட கலெக்டர், மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு கொலைமிரட்டல் எஸ்.எம்.எஸ். கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அன்புச்செல்வனை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர்.

கள்ளக்காதலி கை மாறியதால் ஆத்திரம்

போலீசாரிடம் கைதான பட்டதாரி வாலிபர் அன்புச்செல்வன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்ததை, சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு நிருபர்களிடம் கூறியதாவது:–

கைதான அன்புச்செல்வனுக்கு பனைகுளம் அருகே உள்ள திருமணம் ஆன பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இவர்களது உறவு நீண்டநாட்களாக நீடித்து வந்துள்ளது. சமீபத்தில் அந்த பெண்ணை செல்போனில் அன்புச்செல்வன் தொடர்பு கொண்டபோது ‘பிஸி‘யாக இருந்துள்ளது. பலமுறை முயற்சித்தும் கள்ளக்காதலி பேசிக்கொண்டே இருந்தது தெரியவந்தது. இதனால், கள்ளக்காதலி மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஒருமுறை நேரில் சந்தித்தபோது, தான் தொடர்பு கொண்ட நேரத்தில் யாருடன் பேசிக்கொண்டிருந்தாள் என செல்போன் எண்ணை ஆய்வு செய்தார். அப்போதுதான், அது சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த கார்த்திக்கின் செல்போன் எண் என தெரியவந்தது. கள்ளக்காதலி தன்னை கழற்றி விட்டு, கார்த்திக்குடன் தொடர்பு ஏற்படுத்தி இருப்பதால், கார்த்திக்கை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என அன்புச்செல்வன் நினைத்துள்ளார்.

புதிய சிம்கார்டு

இதற்காக, எவ்வித முகவரியும் கொடுக்காமல் புதிய சிம்கார்டுகள் சிலவற்றை அன்புச்செல்வன் வாங்கி இருக்கிறார். அதன்பின்னர், அதில் ஒரு சிம்கார்டில் இருந்து தர்மபுரி கலெக்டர், சேலம் உதவி கலெக்டர், சேலம் தாசில்தார், சேலம் மாவட்ட முன்னாள் நீதிபதி ஆகியோருக்கு கார்த்திக் பெயரில் கொலை மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பி உள்ளார்.

அதிகாரிகளின் செல்போன் எண்கள் எப்படி கிடைத்தது என்றபோது, ‘கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தேர்தல் நேரத்தில் சேலத்தை மையமாக கொண்டு வெளிவரும் காலை நாளிதழ் ஒன்றில் செல்போன் எண்கள் கொடுக்கப்பட்டதை சேகரித்து வைத்து அதிகாரிகளின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன்‘ என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.எம்.எஸ். அனுப்பிய சிம்கார்டை அவர் உடனே உடைத்து நொறுக்கி இருக்கிறார்.

இவ்வாறு அன்புச்செல்வன் தெரிவித்ததாக ஏ.ஜி.பாபு கூறினார்.

சிம்கார்டு நிறுவனம் மீது நடவடிக்கை

அதைத்தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தியபோது, ஒருமுறை பனைகுளத்தில் உள்ள பெண்ணிடம் இருந்து ‘மிஸ்டுகால்‘ வந்தது. அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது அந்த பெண்ணுடன் தானும் கள்ளத்தொடர்பு ஏற்படுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகர தனிப்படை போலீசார் மிகவும் சாதுர்யமாக விசாரணை மேற்கொண்டு அன்புச்செல்வனை கைது செய்துள்ளனர். மேலும் முகவரி ஏதும் பெறாமல், சிம்கார்டு வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீஸ் துணை கமிஷனர் ஏ.ஜி.பாபு தெரிவித்தார்.

சிறையில் அடைப்பு

கைதான பட்டதாரி வாலிபர் அன்புச்செல்வனை இரவோடு இரவாக சேலம் போலீசார் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலி கை மாறிவிட்ட ஆத்திரத்தில், எம்.ஏ.,பி.எட் முடித்த பட்டதாரி வாலிபர் அமைச்சர், கலெக்டர், நீதிபதிக்கு கொலைமிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.