மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம்

உ.பி. மாநிலம் பதான் மாவட்டத்தில் தலித் சகோதரிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்குவதற்குள் அங்கு மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம் நடைபெற்றுள்ளது.


உத்தரப்பிரதேசம், முசாபர்நகர் துல்ஹரா கிராமத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. துல்ஹாராவில் இருந்து ஷாபூர் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த இளம் பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து மயங்கிய நிலையில் அந்தப் பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை கண்டித்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து குற்றவாளிகளை பிடிப்பதில் மெத்தனம் காட்டியதாக சர்க்கிள் ஆபிசர் உள்ளிட்ட 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அடையாளம் தெரியாத 5 நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் தேடப்பட்டு வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் எச்.என்.சின் தெரிவித்துள்ளார்.