பாஜக ஆட்சியில் திரும்புகிறதா இந்தி மொழி திணிப்பு?

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழம அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்திற்கு, தாளமுத்து நடராஜன் மாளிகை என்ற பெயர் பொருத்தமற்ற ஏதோ பழம் பட்டிக்காட்டுப் பெயராக பார்ப்பவர்களுக்கு தோன்றலாம்.ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி காரணத்தோடுதான் அந்தப் பெயர்களை சி.எம்.டி.ஏ. வளாகத்திற்குச் சூட்ட வேண்டும் என தேர்வு செய்திருக்கிறார்.

தாளமுத்து, நடராஜன் இவர்கள் இருவரும் 1937-38 காலகட்டத்தில் மெட்ராஸ் மாகாணத்தில் நடைபெற்ற முதல் இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்.

பின்நாளில், மீண்டும் மத்திய அரசு இந்தியை திணிக்க முயன்றது. 1965-ல் நடைபெற்ற இரண்டாவது கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஏற்படுத்திய எழுச்சி அலையில் காங்கிரஸை வீழ்த்தி திமுக ஆட்சியை கைப்பற்றியது.

ஆனால், இந்தி எதிர்ப்பில் கோலோச்சிய திமுக, மெட்ராஸ் மாகாண முன்னாள் தலைவர் ராஜாஜியுடன் திமுக நெருங்கிய நட்பு கொண்டது சற்று முரணாகவே பார்க்கப்பட்டது.

இத்தகைய சூழலில், ராஜாஜி திடீரென ஒரு புதிய அரசியல் அவதாரம் எடுத்தார். அப்போது, இந்தி மொழியை அரசின் ஒரே ஆட்சி மொழியாக்கும் 1963- ஆட்சி மொழிகள் சட்டப்பிரிவை அவர் கடுமையாக எதிர்த்தார்.

இந்தி திணிப்பு நியாயமற்றது, ஞானமற்றது, பாரபட்சத்தோடு அதிகாரம் செலுத்தும் முயற்சி என சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தார்.

1937-38 களில் இந்தி திணிப்பை எதிர்த்து தாளமுத்து - நடராஜன் உயிர் நீத்தார்கள் என்றால், 1960-களில் நடந்த 2-வது கட்ட போராட்டத்தில் தமிழ்நாடே கொதித்தெழுந்தது. 1963-ல் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்களை திரட்டி பெருமளவில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தலைமை பொறுப்பிற்கு கருணாநிதியின் பெயர் முன்மொழியப்பட்டது.

இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து, அண்ணாதுரை வாழ்க்கை வரலாற்றை எழுதிய எழுத்தாளர் ஆர்.கண்ணன் குறிப்பிடுகையில்: அண்ணாதுரை கைது செய்யப்பட்டதையடுத்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றது. இந்தி மொழியை அரசு அலுவல் மொழியாக அறிவித்த அரசியல் சாசனப்பிரிவு 17-ன் பிரதிகளை எரிக்க போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்ததையும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நிலைமை பதற்றமானபோது, குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம், 'இந்திக்காக தமிழகத்தை இழக்க வேண்டும் என விரும்புகிறார்களா' என கேட்டதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 60-ஆக அதிகரித்த போது, பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி குறுக்கிட்டு, ஆங்கிலம் மாற்று மொழியாக இருக்கும் என அறிவித்தார்.

இந்தி திணிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி, இந்தி திணிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் பாடம் கற்றுக் கொண்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு திரும்புகிறது. இந்தி மற்றும் வட இந்திய கலாச்சாரத்தை பாஜக திணிக்க முயல்கிறது" என்றார்.

அதேவேளையில், மத்திய அரசின் ஆணையைக் கண்டு தமிழர்கள் யாரும் கலக்கமடைய வேண்டாம். தகவல், தொழில்நுட்ப யுகத்தில் யாரும் யார் மீதும் மொழியை திணிக்க முடியாது என்பதை மக்கள் உணர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு

தமிழகத்தில் எப்போதெல்லாம் இந்தி மொழி திணிப்புக்கு முயற்சி செய்யப்பட்டதோ, அப்போதெல்லாம் தமிழக அரசியல் கட்சிகள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

1937-40: தாளமுத்து, நடராஜன் ஆகிய இரண்டு தமிழ் ஆர்வலர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தில் காவல்துறையினர் தாக்குதலில் கொல்லப்படுகின்றனர். இவர்கள் இருவருமே, இந்தி எதிர்ப்புப் பேராட்டத்தின் முதல் தியாகிகள் ஆகின்றனர்.

1963- நவம்பர்: சி.என்.அண்ணாதுரை தலைமையில் திமுக சார்பில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

1964- ஜனவரி: திருச்சியைச் சேர்ந்த திமுக தொண்டர் சின்னசாமி இந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்து இறந்தார். இன்றளவும் இந்த நாளை திமுக, இந்தி எதிர்ப்பு தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.

1965: இந்தி மொழி நாட்டின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட பிறகு பெருமளவில் போராட்டம் வெடித்தது.

* மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் போராட்டம் வலுவடைந்தன. மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.

* இரண்டு போலீஸார் உள்பட 70 பேர் பலியாக அரசு நெருக்கடிக்கு பணிந்தது.

* லால் பகதூர் சாஸ்திரி மாற்று மொழியாக ஆங்கிலம் பயன்படுத்தப்படும் என அறிவித்தார்
.